என் மகள் காஸா-வில் ஒரு ராணியாக உணர்ந்தாள் – இஸ்ரேலிய தாய் எழுதிய கடிதம்!

Share this News:

பாலஸ்தீன் (29 நவம்பர் 2023): ஹமாஸ் போராளிகள் சமீபத்தில் விடுவித்த பெண் பிணைக் கைதி, டேனியல் அலோனி (Danielle Aloni).  இவர், ஹமாஸ் போராளிகளுக்கு நன்றி கூறி ஹீப்ரு மொழியில் எழுதியுள்ள கடிதம் உலகை அதிர வைத்துள்ளது.  இக் கடிதத்தில், ஹமாஸ் படையினரின் நன்னடத்தைக்கும் பிணைக் கைதிகளைப் பொறுப்புடன் கவனித்துக் கொண்டமைக்கும் நன்றி கூறியுள்ளார்.

இஸ்ரேலின் மொஸாத், ஒரு சக்தி வாய்ந்த உளவுப்படை என உலகம் நம்பிக் கொண்டிருக்கும் அமைப்பு ஆகும்.

கடந்த அக்டோபர் 07 ஆம் தேதி இந்த மொஸாத்தின் கண்களில் வெகு எளிதாக மண்ணைத் தூவினர் ஹமாஸ் போராளிகள்.  இஸ்ரேலுக்குள் பறந்து சென்று, நூற்றுக் கணக்கானோரை பணயக் கைதிகளாக பிடித்து காஸா-விற்குக் கொண்டு வந்தனர்.

பிடித்து வரப்பட்ட பிணைக் கைதிகளுள் இஸ்ரேலிய தாயான டேனியல் அலோனி (Danielle Aloni) மற்றும் அவரது 5 வயது மகள் எமிலியா (Emilia) ஆகியோரும் அடங்குவர். இவர்கள் காஸாவில் கடந்த 49 நாட்களுக்கு மேலாக ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டு இருந்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்தம்

இந்நிலையில் கடந்த நவம்பர் 24 அன்று, கத்தார் நாட்டின் மேற்பார்வையில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ஒரு தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ஹமாஸ் பிடியில் இருந்த பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு, அவர்களது உறவினர்களுடன் இஸ்ரேலில் மீண்டும் இணைந்தனர்.

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்கு புறப்படுவதற்கு முன், பிணைக் கைதியான டேனியல் அலோனி (Danielle Aloni), ஹமாஸுக்கு எழுதிய “நன்றி” கடிதத்தில், “எனது மகள் எமிலியா காசாவில் ஒரு ராணி போல் உணர்ந்தாள்.  அவளிடம் நீங்கள் காட்டிய அன்பிற்கும் மனிதாபிமானத்திற்கும் என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எழுதியுள்ளார்.

கடிதத்தின் முழு பகுதி:

“கடந்த சில வாரங்களாக எங்களைப் பிணையில் வைத்திருக்கும் ஹமாஸ் வீரர்களுக்கு:  நாங்கள் நாளை பிரிந்து விடுவோம் என்று எண்ணுகிறேன். இந்நிலையில், என் 5 வயது மகள் எமிலியாவிடம் நீங்கள் காட்டிய அன்பிற்கும் மனிதாபிமானத்திற்கும் என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி கூறி இக்கடிதத்தை எழுதுகிறேன்.

நீங்கள் அவளுக்கு பெற்றோரைப் போல இருந்தீர்கள். அவள் விரும்புவதை எல்லாம் அவளுக்குச் செய்து தந்தீர்கள். நீங்கள் அனைவரும் அவளுடைய நண்பர்கள் ஆகிவிட்டீர்கள். நட்பைத் தாண்டி, உண்மையிலேயே ஹமாஸ் போராளிகள் அன்பானவர்கள் மற்றும் நல்லவர்கள் எனும் உள்ளுணர்வை அவள் இப்போது பெற்றிருக்கிறாள்.

நன்றி மீண்டும் நன்றி. அன்புடனும் பொறுப்புடனும் பார்த்துக் கொள்ள நீங்கள் செலவழித்த பல மணிநேரங்களுக்கு நன்றி. (இந்நேரம்.காம்)

அவளிடம் பொறுமையாக இருந்து, இனிப்புகள், பழங்கள் மற்றும் விளையாட்டுகள் காட்டி அன்பை அவளிடம் பொழிந்ததற்கு நன்றி.

குழந்தைகள் சிறை பிடிக்கப் படக்கூடாதுதான். ஆனால் உங்களுக்கும் வேறு வழியில்லை.

உங்கள் பகுதியில் நாங்கள் சந்தித்த அன்பான மக்களுக்கும் நன்றி. என் மகள் காஸா-வில் ஒரு ராணி போல் உணர்ந்தாள். இதற்குமுன் என் மகள் இத்தனை அன்பு, மென்மை, பாசத்துடன் நடத்தப்பட்டதில்லை. அதனால் அவளது உணர்வுகள் மேம்பட்டு இருக்கிறது.

ஒருவேளை நான் காஸா-விலேயே பிணைக் கைதியாக தொடர்ந்து இருந்திருந்தாலும், நான் நன்றியுடன் கைதியாகவே என்றென்றும் இருந்திருப்பேன்.

காஸா-வில் நீங்கள் (ஹமாஸ்) எதிர் கொள்ளும் கடினமான சூழ்நிலையிலும், நீங்கள் சந்தித்த கடுமையான இழப்புகளையும் தாண்டி இங்கு எங்களுக்கு வழங்கப்பட்ட உங்கள் அன்பான நடத்தையை நான் என்றென்றும் நினைவில் கொள்வேன்.

இந்த உலகில் நாம் உண்மையிலேயே நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர், குழந்தைகள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும் நல்வாழ்வும் அமைந்திட வேண்டி வாழ்த்துகிறேன்.

மிக்க நன்றி.

இப்படிக்கு,

டேனியல் அலோனி (Danielle Aloni) மற்றும் மகள் எமிலியா (Emilia)

இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் மேற்கத்திய ஊடகங்கள் உட்பட அனைத்து செய்திகளிலும் வெளியாகியுள்ளது.

  • நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

Share this News: