தொற்றுநோயின் பிடியில் சிக்கித் தவிக்கும் பாலஸ்தீன மக்கள்!

Share this News:

பாலஸ்தீன் (27 நவம்பர் 2023): கடந்த 50 நாட்களாக நிலவும் போர்ச் சூழலில், இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்களால் அடியோடு நிலைகுலைந்து போயுள்ளது காஸா நகரம்.  இந்த போர்ச்சூழல், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நான்கு நாட்கள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

போர் பதட்டத்தின் காரணமாக காஸாவில் வசிக்கும் 17 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீன பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். ஏராளமான உயிர் இழப்புகளால், பிணங்களை ஒரே புதைகுழியில் அடக்கம் செய்து வருகின்றனர்.

இச்சூழலில், காஸா பகுதியில் கடுமையான தொற்று நோய்கள் பரவுவதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (OCHA) ஒரு எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது.

காசாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். ஏற்கனவே நெருக்கடியாக மக்கள் வாழும் சூழலில், மேலும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள தங்குமிடங்களில் இடம் குறைவாக இருப்பதால், பெரும்பாலான இடம்பெயர்ந்த பொதுமக்கள் தங்குமிடங்களின் வெளிப்புறச் சுவர்களையும் தாண்டி திறந்த வெளியில் அல்லது தெருக்களில் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். (இந்நேரம்.காம்)

காஸா-வின் பொதுமக்கள் உயிர் வாழ அத்தியாவசியத் தேவையான உணவு, மின்சாரம், நீர், எரிபொருள் என அனைத்தையும் இஸ்ரேல் துண்டித்தது நினைவிருக்கலாம்.

பல்வேறு நாடுகளின் கண்டனங்கள் வலுத்தும் போர் குற்றங்களை நிறுத்திக் கொள்ளாமல், காஸாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் குறி வைத்து இஸ்ரேல் தாக்கி விட்ட சூழலில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற வசதியின்றி இறந்து வருகின்றனர்.

இதன் காரணமாக மோசமான சுகாதார சீர்கேடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள், தோல் அழற்சி மற்றும் பல்வேறு உபாதைகள் அதிகரித்துள்ளன. ஐ.நா. தங்குமிடங்களிலும் இத்தகைய நோய்கள் பரவி வருகின்றன. இவ்வாறு OCHA அறிக்கை எச்சரித்துள்ளது.

இஸ்ரேலிய ராணுவத்தினர் குண்டு வீசும் ஒவ்வொரு நாளும், காஸா-வின் வடக்குப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அச்சுறுத்தி – ஏற்கனவே நெருக்கடியான தெற்குப் பகுதியை நோக்கி நகரத்தியது குறிப்பிடத் தக்கது.

  • நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

Share this News: