வாடிக்கையாளர்கள் புறக்கணிப்பால் விலைகளைக் குறைக்கிறது மெக் டொனால்டு உணவகம்!

Share this News:

ரியாத், சவூதி (29 நவம்பர் 2023): மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மெக் டொனால்ட் உணவங்களில் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு குறைக்கப் படுகின்றன. வாடிக்கையாளர்கள் மெக் டொனால்ட் உணவை புறக்கணித்ததால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது.

பாலஸ்தீனின் காஸா பகுதியில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் கடந்த 50 நாட்களாகத் தொடர்ந்து குண்டு வீசி இனப்படுகொலை செய்து வருகிறது. போர்க் குற்றமாக கருதப்படும் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களைக் குறி வைத்து தாக்கி வருகிறது.

இஸ்ரேலிய ஆதரவு (Support):

இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள மெக் டொனால்ட் உணவகம், காஸா-மீது குண்டு வீசும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கு (Israel Defense Forces) இலவசமாக உணவு அளித்து தமது தரப்பு ஆதரவை அளிப்பதாக அறிவித்தது. இது பற்றி இஸ்ரேலில் உள்ள மெக் டொனால்ட் நிறுவனம், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்ட்டாகிராம் தளத்தில் பதிவு வெளியிட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து உலகமெங்கும் பலத்த கண்டனங்கள் வலுத்த சூழ்நிலையில், மெக் டொனால்ட் உணவைப் புறக்கணிக்கும் வீடியோ பதிவுகள் #BoycottMcDonalds எனும் ஹாஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது. (இந்நேரம்.காம்)

புறக்கணிப்பு (Boycott):

இதனைத் தொடர்ந்து, மெக் டொனால்ட் உணவை மக்கள் பெருவாரியாகப் புறக்கணித்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளான சவூதி, குவைத், ஓமன், கத்தார் நாட்டில் உள்ள கிளைகள் அடியோடு பாதிக்கப்பட்டு மெக் டொனால்ட் நிறுவனத்திற்கு பேரதிர்ச்சியைத் தந்துள்ளது.

உணவை வாங்க வாடிக்கையாளர்கள் இல்லாத சூழலில் மத்திய கிழக்கில் உள்ள மெக் டொனால்ட் நிறுவனக் கிளைகள், பல்வேறு உணவுப் பொருட்களுக்கு விலைகளைத் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது.

இந்நிலையில், மெக் டொனால்ட்டின் தலைமையகம், தனது நிறுவனத்தின் இஸ்ரேலிய கிளைக்கும் பிற நாட்டு கிளைகளுக்கும் தொடர்பில்லை எனவும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அனைத்து மெக் டொனால்ட்டின் கிளைகளும் பாலஸ்தீனத்திற்கே ஆதரவு அளிப்பதையும் சுட்டிக் காட்டி விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

– நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)


Share this News: