இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களித்தது இந்தியா!

Share this News:

பாலஸ்தீன் (13 நவம்பர் 2023): காஸா-வை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் எண்ணத்துடன் தொடர்ச்சியான தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருந்தைக் கண்டித்து உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளைக் கண்டித்து ஐ.நா சபையில் சமீபத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இஸ்ரேலுக்கு எதிரான அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து தன் நிலைபாட்டை தெரிவித்துள்ளது.

காஸா-வில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், ஐநா அகதிகள் முகாம்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் காஸாவை விட்டு குடும்பத்துடன் வெளியேறும் அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைத்து இஸ்ரேல் குண்டுகள் மழை பொழிந்து வருகிறது.

மனிதன் உயிர் வாழ இன்றியமையாத தேவையான உணவு, குடிநீர், மின்சாரம் என அனைத்தையும் காஸா-வில் இஸ்ரேல் துண்டித்து விட்டது.

இதன் காரணமாக தினமும் நூற்றுக் கணக்கான குழந்தைகள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பொதுக்கள் இறந்து வருகின்றனர். காஸா-வை மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாக ஆக்கியிருக்கிறது இஸ்ரேல்.

இந்நிலையில், ஹமாஸ் போராளிகளை அழிப்பதாகச் சொல்லி கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி, காஸா-மீது இஸ்ரேல் துவக்கிய தாக்குதலுக்கான முழு காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.

காஸாவில் போர் முடிவுக்கு வந்த பிறகும் கூட, காஸா-வை முழுமையாக ஆக்கிரமித்து அதன் ஒட்டுமொத்த பாதுகாப்புப் பணிகளையும் மேற்கொள்ளப் போவதாக இஸ்ரேல் தற்போது அறிவித்துள்ளது.

“காஸாவில் காலவரையின்றி பாதுகாப்புப் பொறுப்பை இஸ்ரேல் ஏற்கவேண்டியிருக்கும் என நினைக்கிறேன்” என்று பெஞ்சன் நெதன்யாகு கூறியுள்ளார்.

காஸா-வில் குடியேற்றத்தை மேற்கொள்ளும் போருக்காக, இஸ்ரேல் மீது உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. தொடர்ந்து, இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளைக் கண்டித்து ஐ.நா சபையில் சமீபத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இஸ்ரேலுக்கு எதிரான அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்கிறது. இதுநாள் வரை இஸ்ரேலுக்கு கொடுத்து வந்த ஆதரவை, இந்த தீர்மானம் மூலம் விலக்கிக் கொண்டுள்ளது இந்தியா. (இந்நேரம்.காம்)

கிழக்கு ஜெருசலம், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைக்கு எதிராக ஐ.நா கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உட்பட 145 நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இந்த வரைவுத் தீர்மானம் நவம்பர் 9-ம் தேதி கொண்டுவரப்பட்டது.

இஸ்ரேல், மாஷல் தீவுகள், கனடா, ஹங்கேரி உட்பட ஏழு நாடுகள் மட்டும் ஐ.நா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. 18 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

முன்பு – இஸ்ரேல், ஹமாஸ் படை ஆகிய இரு தரப்புக்கும் இடையே சண்டை நிறுத்தம் குறித்து ஐ.நா-வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அதற்கான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

ஆனால் தற்போது, காஸா மீதான தாக்குதலை நாளுக்கு நாள் இஸ்ரேல் தீவிரப்படுத்திவரும் நிலையில், இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்திருக்கிறது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருக்கிறார்கள்.

  • நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

Share this News: