மழை வெள்ளத்தால் மூழ்கிய ஓமான் மற்றும் துபாய்!

மழை வெள்ளத்தால் மூழ்கிய ஓமான் மற்றும் துபாய்!
Share this News:

மஸ்கட், ஓமான் (17 ஏப்ரல் 2024):  ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இல் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. ஓமானில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கியதால் இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். விமானங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் பருவ நிலை மாற்றம் காரணமாக அசாதாரண சூழல் நிலவுகிறது. சூறைக்காற்று, புயல், மழை என கடந்த இரு நாட்களாக வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஓமானில், நேற்று 16 ஏப்ரல் 2024 செவ்வாய் கிழமையன்று ஏற்பட்ட மழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக குறைந்தது ஒன்பது பள்ளிக் குழந்தைகள் மற்றும் அவர்களது ஓட்டுனர்கள் இறந்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், காணாமல் போன இருவரை மீட்புக் குழுக்கள் இன்னும் தேடி வருவதாக அவசரகால மேலாண்மைக்கான தேசியக் குழு தெரிவித்துள்ளது.

ஓமானில் பல மாகாணங்களில் மோசமான வானிலை காரணமாக பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள நிர்வாக ஊழியர்களுக்கு அரசாங்கம் விடுமுறை அளித்துள்ளது. (இந்நேரம்.காம்)

அதே நேரத்தில் சுல்தானகத்தின் பிற பகுதிகளில் ஆன்லைன் மூலம் வேலை செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மக்கள் வசிக்கும் இடங்களில் நீர் சூழ்ந்து ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தால், தாமதமின்றி உடனடியாக தங்குமிடங்களை விட்டு வெளியேறுமாறு அரசால் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெள்ளம்

இதற்கிடையில், அதே நாளன்று அண்டை நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பலத்த மழை பெய்தது. இதனால் துபாயின் முக்கிய நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.

பலத்த புயல் காற்று மற்றும் பெருமழை காரணமாக, துபாயின் சர்வதேச விமான நிலையத்தில் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது.

முன் எச்சரிக்கை நடவடிக்கையின்படி, புயலுக்கு முன்னதாகவே நாடு முழுவதும் அறிவிப்புகள் செய்யப்பட்டு பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், பெரும் விபத்துகளும் உயிர் சேதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன.

அரசாங்க ஊழியர்கள் ஆன்லைன் மூலம் பணி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு நிறுவனங்கள் தத்தம் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளன.

வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்து கடுமையாக  பாதிக்கப்பட்டதால், டேங்கர் லாரிகள் மூலம் நெடுஞ்சாலைகளில் உள்ள வெள்ள நீரை வெளியேற்றி வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில், துபாயில் மட்டும் 142 மிமீ (5.59 அங்குலம்) மழை கொட்டித் தீர்த்துள்ளது.

இது தவிர, பஹ்ரைன், மற்றும் சவுதி அரேபியாவிலும் இரு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

  • நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

Share this News: