நேபாளில் தடையாகிறது டிக்டாக் செயலி!

காத்மண்டு (14 நவம்பர் 2023) : நாட்டின் சமூக நல்லிணக்கம், குடும்ப கட்டமைப்புகள் மற்றும் சமூக உறவுகளைச் சீர்குலைக்கிறது போன்ற காரணங்களைச் சொல்லி, டிக்டாக் செயலியைத் தடை செய்துள்ளது நேபாள அரசு. 

சுமார் ஒரு பில்லியன் மாதாந்திர பயனர்களைக் கொண்ட பிரபலமான வீடியோ-பகிர்வு தளம் டிக்டாக் (TikTok).

டிக்டாக் செயலியால் இளம் வயதினர் மனதளவில் பாதிக்கப் படுவதாகவும், தீங்கு விளைவிக்கும் வீடியோ பதிவுகள் பற்றிய அரசு விதிகளை டிக்டாக் செயலி மீறுவதாகவும் காரணம் கூறப்பட்டு பல்வேறு நாடுகளில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது.

“நேபாளில் டிக்-டாக் செயலி தடை செய்வதற்கான உறுதியான முடிவு தற்போது எடுக்கப் பட்டுள்ளது” என்று தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரேகா சர்மா கூறியுள்ளார். (இந்நேரம்.காம்)

நேபாளில் டிக்டாக் தடை பற்றிய செய்தி வெளியானவுடன், அது குறித்த பல்வேறு விமர்சனங்கள் வீடியோக்கள் வடிவில் டிக்டாக்கில் ஆயிரக்கணக்கில் பரவியுள்ளன.

சமூக வலைத்தளங்கள் பற்றிய புள்ளிவிபரப்படி, உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக தளங்களில் டிக்டாக் ஆறாவது இடத்தில் உள்ளது.

இணைய உலகில் உச்சாணிக் கொம்பில் ஆதிக்கம் செலுத்தி வரும் மெட்டா  (Meta) நிறுவனத்திற்கு சொந்தமானவை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம். டிக்டாக்கை முடக்கியதன் பின்னணியில் மெட்டா நிறுவனம் செயல்பட்டதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

சமூக வலைத்தளங்களில் யார் கொம்பன் எனும் இந்த போட்டியில் டிக்டாக் சற்று பின்தங்கியிருந்தாலும், சமீபத்தில் இளைஞர்களிடையே டிக்டாக் பெற்றுவரும் அசுர வளர்ச்சி, மெட்டா நிறுவனத்தை மிரள வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  • நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)
இச்செய்தியைப் பகிருங்கள்: