இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.4 லட்சம் – உயிரிழப்பு 14,000 பேர்!

Share this News:

புதுடெல்லி (23 ஜூன் 2020): இந்தியாவில் இன்றுவரை கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 4,40,215 உயர்ந்துள்ளது. இதேபோல், மொத்த உயிரிழப்பு 14,011ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிக பாதிப்பு கொண்ட முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதைத்தொடர்ந்து, டெல்லி, தமிழ்நாடு, குஜராத், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. இதுவரை 2,48,190 கொரோனா நோயாளிகள் குணமைடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைபவர்களின் விகிதமானது 56.37 சதவீதமாக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1,36,796 ஆக அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 6,283ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் 62,655 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,233 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில், 2,710 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னையில் மட்டும், 1,500 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 62,087 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை குறைக்கும் விதமாக சென்னையை தொடர்ந்து, மதுரையிலும் ஜூன்24ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 4.72 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 90.94 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Share this News: