கொரோனாவின் கோரமுகம் – வீதிகளில் வீசப்படும் உடல்கள்!

Share this News:

குவிட்டோ (08 ஏப் 2020): கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றான ஈகுவேடாரில் மரணிக்கும் உடல்கள் வீதிகளில் வீசப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.

ஈகுவேடார் உலகின் ஏழை நாடுகளில் ஒன்று. இங்கு சுமார் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 220 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவின் கோரமுகத்தால் வளர்ந்த நாடுகளே திணறிக் கொண்டு இருக்க, ஏழை நாடுகள் இதன் பாதிப்பால் தவித்துக் கொண்டு இருக்கின்றன. தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரில் பிப்ரவரி 15ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு அந்த தொற்றின் அபாயத்தை உணராத மக்கள் அரசின் அறிவுறுத்தல்களை மதிக்காமல் இருந்ததால், இன்று 4 ஆயிரம் பேருக்கு இந்நோய் பரவியிருக்கிறது.

அங்கு இருக்கும் மருத்துவ வசதிகளைக் கொண்டு பரிசோதனை செய்யப்பட்டவர்கள் மட்டும்தான் 4 ஆயிரம் பேர், மருத்துவமனைக்கு வராமலேயே பாதிக்கப்பட்டிருப்பவர்கள், மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலையில் கொரோனா பாதித்து வீட்டிலேயே உயிருக்குப் போராடி வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள், மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாமல் சிகிச்சைப் பெறாமலேயே மடிந்து போகும் அவலம் நிலவுகிறது.

உயிரிழந்தவர்களை புதைக்க சவப்பெட்டி கூட கிடைக்காமல் மக்கள் அல்லாடி வருகிறார்கள். உடல்களை சுமந்து சென்று புதைக்க வாகனங்கள் கிடைக்காமல், இறந்த உடலை வீட்டில் வைத்திருப்பதால் தங்களுக்கும் கொரோனா பரவும் என்று பயந்து, உயிருக்கு உயிரான உறவுகளின் உடல்களுக்கு இறுதிச் சடங்கு கூட செய்ய முடியாமல், காகிதங்களிலும், பிளாஸ்டிக் பைகளிலும், பெட்ஷீட்களிலும் சுற்றி ஆள் நடமாட்டம் இல்லாத சாலைகளில் கொண்டுச் சென்று வீசிவிட்டுச் செல்கிறார்கள் குடும்பத்தினர்.

தற்காலிகமாக குளிர்பதன வாகனங்களை ஏற்பாடு செய்திருக்கும் ஈகுவேடார் அரசு அதில் சாலையோரம் இருக்கும் உடல்களை போட்டு பதப்படுத்தி வைத்திருக்கிறது. மருத்துவமனைகளில் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அரசே குறிப்பிட்ட இடத்தில் புதைத்துவிட்டு குடும்பத்தினருக்கு புதைக்கப்பட்ட இடத்தின் விவரத்தை மட்டும் தெரிவித்து விடும் அளவுக்கு அங்கு நிலைமை மோசமாகியுள்ளது.

பலருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படாத நிலையில், உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டிருப்பதால், அங்கு கொரோனா பாதித்தவர்கள் எத்தனை பேர், இறந்தவர்கள் எத்தனை பேர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கப்பெறவில்லை.


Share this News:

Leave a Reply