பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

Share this News:

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

தனது இல்ல அலுவலகமான ‘கிருஷ்ணா’வில் 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பில் அவர் இந்த உறுதிமொழியை அளித்தார்.

நாட்டை ஆபத்தில் ஆழ்த்தும், பன்மைத்துவத்தை அழிக்கும் பாஜகவுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, இது தொடர்பாக மக்களை எச்சரிக்க முன்வந்த எழுத்தாளர்களுக்கு சித்தராமையா வாழ்த்து தெரிவித்தார்.

நூல்கள் மற்றும் பாடங்கள் மூலம் குழந்தைகளின் மனதை மாசுபடுத்தும் செயலை மன்னிக்க முடியாது என்றும் அவர் உறுதியளித்தார். கல்வியாண்டு துவங்கியுள்ளதால், மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம்,” என்றார்.

மேலும் விவசாயிகள்-தொழிலாளர்-தலித் இயக்கங்கள், இலக்கியம் மற்றும் எழுத்தாளர்கள் மீதான பொய் வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றார்.

புதிய கல்விக் கொள்கையின் (NEP) பெயரில் கல்வித் துறையில் கலப்படம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. இது தொடர்பாக மீண்டும் ஒரு தனிக் கூட்டம் கூட்டப்பட்டு விரிவான முறையில் விவாதித்து கடுமையான மற்றும் உறுதியான முடிவுகள் எடுக்கப்படும் என்று சித்தராமையா தெரிவித்தார்.

சட்டத்தை கையில் எடுத்து வகுப்புவாத கலவரம் செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். என்றும் சித்தராமையா உறுதியாகக் கூறினார்.


Share this News: