ருத்ராட்சம் மற்றும் சிலுவையுடன் ஹிஜாபை ஒப்பிட முடியாது – உச்ச நீதிமன்றம்!

Share this News:

புதுடெல்லி (08 செப் 2022): ருத்ராக்ஷம் மற்றும் சிலுவையை ஹிஜாபுடன் ஒப்பிட முடியாது ஏனெனில் அவை சட்டைக்குள் அணிந்திருப்பதால் மற்றவர்களுக்குத் தெரிவதில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு தடை விதித்துள்ள நிலையில் இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனல் கர்நாடக அரசின் உத்தரவை தடை செய்ய முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.

விசாரணையின் போது நீதிமன்றம் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தது.

மனுதாரர்களில் ஒருவருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், சீருடையுடன் மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என்பது ஏற்புடையதா? இது மாணவர்களுக்கு விடும் சவால் என்று அவர் கூறினார். ஹிஜாபுக்கும் பர்தாவுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது, ஏனெனில் ஹிஜாப் என்பது ஒரு தலைக்கவசம் என்று காமத் கூறினார்.

மேலும் நீதிமன்ற அறையில் ஹிஜாப் அணிந்திருந்த ஒரு பெண் வழக்கறிஞரைச் சுட்டிக்காட்டி, அவர் சீருடையின் நிறத்தில் முக்காடு அணிந்திருப்பதாக மூத்த வழக்கறிஞர் காமத் கூறினார். ஒரே சீரான நிறத்தில் உள்ள முக்காடு யாரையும் புண்படுத்துமா? அல்லது ஒழுக்கமின்மையை ஏற்படுத்துமா? என்று காமத் நீதிபதிகளிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும் கேந்திரிய வித்யாலயாக்களின் சுற்றறிக்கையைக் குறிப்பிட்ட காமத், இது சீருடையில் பொருந்தக்கூடிய நிறத்துடன் ஹிஜாப்பை அனுமதிக்கிறது. என்றார்

மேலும் தென்னாப்பிரிக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை குறிப்பிட்ட வழக்கறிஞர் காமத், ஒரு இந்து பெண் தனது கலாச்சார நம்பிக்கையின் ஒரு பகுதியாக பள்ளியில் மூக்குத்தி அணிய அனுமதித்துள்ளது என்றார். இதற்கு பதிலளித்த நீதிபதி குப்தா, தனக்குத் தெரிந்தவரை மூக்குத்தி என்பது மதப் பழக்கத்தின் ஒரு பகுதி அல்ல என்றார். இதற்கு விளக்கமளித்த காமத், மூக்குத்தி மத அடையாளமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது பெண்ணின் அடையாளத்தின் ஒரு பகுதியாக உள்ளது மற்றும் மூக்குத்தியில் சில மத முக்கித்துவங்கள் உள்ளன. என்றார்.

விசாரணையின் போது, ​​நீதிபதி குப்தா,கூறுகையில் நமது நாடுகளைப் போல வேறு எந்த நாடும் இல்லை என்றும், மற்ற எல்லா நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை கொண்டுள்ளன. நமது நாடு நமது குடிமக்களுக்கு பல உரிமைகள் வழங்கியுள்ளன. என்றார்.

மேலும் வழக்கறிஞர் காமத், ஹிஜாப் தொடர்பான அமெரிக்க உச்ச நீதிமன்றத்தையும், சீக்கியர்களுக்கான கடா தொடர்பான கனேடிய நீதிமன்ற தீர்ப்பையும் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி குப்தா, “அமெரிக்காவையும், கனடாவையும் நம் நாட்டுடன் எப்படி ஒப்பிடுவது? ஒவ்வொரு நாட்டின் தீர்ப்பும் அவர்களது சமூக சூழலை பொறுத்தே அமையும் என்றார்.

19(1)(a) பிரிவின் கீழ் ஆடை அணியும் உரிமை ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்ட வழக்கறிஞர் காமத், உச்ச நீதிமன்றத்தின் 2014 NALSA தீர்ப்பை மேற்கோள் காட்டி, சட்டப்பிரிவு 19(1)(a) இன் கீழ் ஆடை அணிவது அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதை நியாயமற்ற முடிவுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்று கூறிய நீதிமன்றம், “உடை அணிவது அடிப்படை உரிமை என்றால், ஆடைகளை அவிழ்ப்பதும் அடிப்படை உரிமையாகிவிடும்” என்று கூறியது.

விசாரணை முடிவடையாததால், இந்த வழக்கை இன்றும் நீதிமன்றம் விசாரிக்கிறது.


Share this News:

Leave a Reply