பில்கிஸ் பானு பாலியல் வழக்கு குற்றவாளிகள் விடுதலையை ரத்து செய்யும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

புதுடெல்லி (22 அக் 2022): 2002 கோத்ரா கலவரத்தின் போது பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அவரது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்த 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய பெண்கள் அமைப்பின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முக்கிய மனுவுடன் இந்த மனுவையும் விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

முன்னதாக, 11 குற்றவாளிகளுக்கு விடுதலை அளித்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேலும் இதுகுறித்த மறு விசாரணை நவம்பர் 29 அன்று நடைபெறவுள்ளது.

இந்த விசாரணையில் குஜராத் அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் குற்றவாளிகளுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையை முடித்ததாகவும், அவர்களின் “நடத்தை நன்றாக இருந்தது” எனக் கூறி அவர்களுக்கு வழங்கப்பட்ட விடுதலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தது.

1992 ஆம் ஆண்டின் கொள்கையின்படி அனைத்து 11 குற்றவாளிகளின் வழக்குகளையும் பரிசீலித்து, ஆகஸ்ட் 10, 2022 அன்று விடுதலை செய்ய உத்தரவு வழங்கப்பட்டதாக மாநில அரசு கூறியது, மேலும் மத்திய அரசும் குற்றவாளிகளை விடுதலை செய்ய அனுமதி அளித்ததாக குஜராத் அரசு தெரிவித்தது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply