ஹிஜாப் விவகாரம் – பாகிஸ்தானுக்கு அசாதுதீன் ஒவைசி எச்சரிக்கை!

Share this News:

ஐதராபாத் (10 பிப் 2022): இந்தியாவில் ஹிஜாப் விவகாரத்தில் பாகிஸ்தான் மக்கள் தலையிட வேண்டாம் என ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் முஸ்லீம் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவ்விவகாரம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே ஹாசன் அரசு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை காவித் துண்டு அணிந்த‌ ஏபிவிபி அமைப்பினர் சூழ்ந்து கொண்டு ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பினர். அந்த கூட்டத்துக்கு அஞ்சாமல் மாணவி தனியாளாக ‘அல்லாஹ் அக்பர்’ என முழக்கம் எழுப்பிய காட்சி உலகளவில் சமூக வலைத்தளங்களின் வாயிலாக வைரல் ஆனது.

இந்த விவகாரத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “நாளுக்கு நாள் வெறுப்பு அரசியல் இந்தியாவில் எப்படி வலுவடைந்து வருகிறது என்பதையே இந்த ஹிஜாப் விவகாரம் காட்டுகிறது. வெறுப்பு அரசியல் கூறுகளை ஆளும் பாஜக ஊக்கப்படுத்துகிறது. இந்தச் சண்டையை ஹிஜாப் அல்லது இஸ்லாமியர்களுடன் இணைக்க வேண்டாம். பள்ளி மாணவிகள் தங்களின் அரசியலமைப்பு உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணியும் உரிமையை மறுப்பது என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்” என்றார்.

ஹிஜாப் சர்ச்சை தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து வரும் ஆதரவான கருத்துகளுக்கு ஒவைசி கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார். “பாகிஸ்தான் மக்களிடம் நாங்கள் ஒன்றை சொல்கிறோம். இங்கே என்ன நடக்கிறது என பார்க்காதீர்கள், அங்கேயே பாருங்கள். உங்களுக்கு பலூச்சிஸ்தான் பிரச்னை, உள்நாட்டு சண்டைகள் என பல பிரச்னைகள் உள்ளன. அவற்றை பாருங்கள். இது எங்கள் வீடு. உங்கள் கால் அல்லது மூக்கை இங்கே நுழைக்க வேண்டாம்” என்று ஒவைசி எச்சரிக்கும் வகையில் பேசினார்.


Share this News:

Leave a Reply