பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது ஏன்? – காவல்துறை பரபரப்பு விளக்கம்!

Share this News:

சென்னை (10 பிப் 2022): சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ளது பாஜக தலைமை அலுவலகம். நேற்றிரவு அந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.

இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியுள்ளனர். நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் நேரிடவில்லை. காவல் துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோதும், அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

இருச்சக்கர வாகனத்தில் வந்தவர்கள் யார் என்பது குறித்து, பா.ஜ.க. அலுவலகத்திலும், அதைச் சுற்றுபுறச் சாலைகளிலும் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்துள்ள காவல்துறையினர், அவற்றை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இதில் வினோத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக காவல்துறை இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், விசாரணையில் எதிரி வினோத் (எ) கருக்கா வினோத் தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக பா.ஜ.க.வின் நிலைபாட்டை கருத்தில் கொண்டு ஆத்திரத்தில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் 3 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியது தெரியவந்துள்ளது. மேலும் முதற்கட்ட விசாரணையில் இவர் மத ரீதியாகவோ, அரசியல் சம்மந்தமாகவோ மேற்படி குற்றச் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதும், இவர் இவ்வாறு பொது பிரச்சனையில் தானாகவே தலையிட்டு குடிபோதையில் இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் மனநிலை கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் விசாரணையில் வினோத் (எ) கருக்கா வினோத், E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே 4 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 10 குற்ற வழக்குகள் உள்ளதும், ஏற்கனவே 2015ம் ஆண்டு R-1 மாம்பலம் காவல் நிலைய எல்லையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசியதும், 2017ம் ஆண்டு E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய வாசலில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசியுள்ளதும், இது தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக்குப் பின்னர் எதிரி வினோத் (எ) கருக்கா வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply