ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநரானார் மோடி-அமித்ஷாவின் நெருங்கிய சகா!

Manoj Sinha

சிறீநகர் (05 ஆக 2020): மோடி-அமித்ஷாவின் நெருங்கிய சகா எனும் தகுதியுடன், பிரிவு 370 நீக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்பட்டார் மனோஜ் சின்ஹா என்பவர்..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர்தான் மனோஜ் சின்ஹா. ஆனால் பா.ஜ.க.-வின் வேறு திட்டங்கள் மூலம் யோகிக்கு அந்த ஜாக்பாட் அடித்துவிட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-ஆவது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு, மாநிலமும் ஜம்மு காஷ்மீர், லடாக் எனும் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

அப்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக முர்மு நியமிக்கப்பட்டார். தற்போது முர்மு தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதில் மூத்த பா.ஜ.க.தலைவரும் மத்திய அமைச்சருமான மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் சின்ஹா, பூமிகார் ஜாதியைச் சேர்ந்தவர். உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் பெரும்பான்மையினராக உள்ளனர். சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் பீகாரிலும் பூமிகார் ஜாதியினர் வலிமையாக உள்ளனர் என்பது குறிப்பிடத்ததக்கது.

இரயில்வே துறை துணை இணை அமைச்சராக இருந்த மனோஜ் சின்ஹா, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர். 2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக மட்டுமல்லாமல் முதல்வர் வேட்பாளராகவும் எதிர்பார்க்கப்பட்டவரும் கூட…!

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply