பஞ்சாபில் பிரதமர் மோடியை வழிமறித்தது பாஜகவினர் – விவசாயிகள் பரபரப்பு தகவல்!

புதுடெல்லி (09 ஜன 2022): பஞ்சாபில் பிரதமர் மோடியை வழிமறித்தது விவசாயிகளல்ல, பாஜகவினர் தான் என்று கிஷான் எக்த மோர்ச்சா தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை, பல புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கான பூஜைக்காக, பிரதமர் மோடி பஞ்சாப் சென்றார். மோசமான வானிலை காரணமாக அவர் ஹெலிகாப்டர் பயணத்தைத் தவிர்த்துவிட்டு, சாலை மார்க்கமாகப் பயணத்தைத் தொடர்ந்தார்.

அப்போது, ஹுசைனிவாலாவிலுள்ள தியாகிகள் நினைவிடத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகனம் மறிக்கப்பட்டது. மேம்பாலத்தில் சிலர் சாலைமறியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதனால், பிரதமர் மோடியின் வாகனம் மேம்பாலத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை சிக்கிக்கொண்டு நின்றது. இந்த பாதுகாப்பு குறைபாடு காரணமாக, அவர் மீண்டும் டெல்லி திரும்பினார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மத்திய உள்துறை அமைச்சகமும், பா.ஜ.க-வினரும் பஞ்சாப் அரசின் அலட்சியத்தால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் குற்றம்சாட்டின. மேலும், இந்த விவகாரம் தொடர்பாகப் பஞ்சாப் அரசு உரிய விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியது.

பிரதமரின் காரை பாரதிய கிசான் சங்கத்தினர் தான் மறித்தனர் என்று குற்றம்சாட்டப்பட்டது. அவர்களும், தங்களுக்கு மோடி வருகிறார் என்று தெரியாததால் தான் போராட்டம் செய்ததாகத் தெரிவித்தனர். இந்த நிலையில், மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகனம் அருகே பா.ஜ.க கொடி ஏந்திய நபர்கள், “மோடி வாழ்க!” என்று கோஷமிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்திருக்கும் விவசாய சங்கத்தினர், “பிரதமர் மோடிக்குப் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதற்கு விவசாயிகள் காரணமில்லை. அந்த வீடியோ பதிவில், பிரதமர் மோடி வாகனத்தின் அருகில், பா.ஜ.க தொண்டர்கள் கோஷமிடுகிறார்கள். அது பாதுகாப்பு குறைபாடாகத் தெரியவில்லையா? பிரதமர் மோடி, `என் உயிர் காப்பாற்ற பட்டுவிட்டது’ என்று பஞ்சாப் மீதும், விவசாயிகள் மீதும் பழி போட முயல்கிறார்.

இதற்கிடையே “எந்த துப்பாக்கிச்சூடும், கல்வீச்சும் நிகழவில்லை. அப்படியிருக்கும் பட்சத்தில், பிரதமர் நரேந்திர மோடி யாரிடமிருந்து தன்னை காத்துக் கொண்டார்? பா.ஜ.க தொண்டர்கள் தான் கொடி ஏந்தி கோஷமிட்டுக் கொண்டு முன் செல்கிறார்கள். அப்படியென்றால், மோடி அஞ்சுவது பா.ஜ.க தொண்டர்களுக்கு தானா?” என்று கிஷான் எக்த மோர்ச்சா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply