இந்தியாவில் ஒரே நாளில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

Share this News:

புதுடெல்லி (19 ஜன 2022): இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,82,970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகள் ஓய்ந்த நிலையில், தற்போது டெல்டா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் மூன்றாம் அலையாக பரவி வருகிறது. இதனால் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு, முழு பொதுமுடக்கம் ஆகிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,82,970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,38,018 ஆக இருந்த நிலையில் இன்று தினசரி பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பு எண்ணிக்கையை விட 44,889 அதிகமாகும். கடந்த ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 441ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,88,157 ஆக உள்ளது. மேலும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18,31,000 ஆக பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நேற்று 8,891 ஆக இருந்த நிலையில், இன்று 8,961 ஆக உயர்ந்துள்ளது


Share this News:

Leave a Reply