இந்தியாவில் வறுமை தாண்டவமாடும் – முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

Share this News:

புதுடெல்லி (27 ஏப் 2020): லாக்டவும் மேலும் தொடர்ந்தால் இந்தியாவில் வறுமை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் எச்சரித்துள்ளார்.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றானது 2 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளை மட்டும் ஏற்படுத்திவிடவில்லை. உயிரிழப்புகளோடு சேர்த்து பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவலை தடுக்க மே 3 ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மந்தன் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட “கொரோனாவுக்கு பிந்தைய உலகத்திற்கான பாடங்கள்” என்கிற இணைய வழி கூட்டத்தில் பேசிய சுப்பாராவ், மேற்கண்ட தனது கருத்தினை பதிவு செய்திருந்தார். மேலும், இந்தியாவில் பொருளாதார திருப்புமுனை வேகமாக இருக்கும் என்றும், ‘V’ வடிவ மீட்பு எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

“பெரும்பாலான ஆய்வாளர்கள் இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சியானது எதிர்மறையாகச் செல்லும் அல்லது வளர்ச்சி சுருங்கிவிடும் என கருதுகிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே நம்முடைய வளர்ச்சி சரிந்துவிட்து என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஐந்து சதவிகிதமாக இருந்த கடந்த ஆண்டின் வளர்ச்சியானது தற்போது முற்றிலுமாக நின்றுவிட்டது. இந்த ஆண்டு நாம் எதிர்மறை அல்லது பூஜ்ஜியம் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கப்போகிறோம்.” என சுப்பாராவ் கூறியுள்ளார்.

“நாம் ஏழ்மை நாடு என்பதால், இந்த நெருக்கடிக்குப் பிறகு நம்முடைய செயல்பாடு சிறப்பானதாக இருந்தாலும் அது பலனளிக்காது. தற்போது நடைமுறையில் இருக்கும் முழு முடக்க நடவடிக்கை நீட்டிக்கப்பட்டால் தேசத்தில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் வாழ்வின் விளிம்புகளுக்கு தள்ளப்படுவார்கள்.

ஆனால், ஆய்வாளர்கள் கணித்தபடி நாட்டில் ‘V’ வடிவ மீட்பு இருக்கும். இந்த மீட்சி மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறந்தது. சூறாவளி, நிலநடுக்கம் என இயற்கை பேரிடர்களால் நமது பொருளாதார அல்லது உற்பத்தி கட்டமைப்புகள் சேதமாகிவிடவில்லை. எனவே இயல்புநிலை திரும்பியதும் மக்கள் தங்கள் வேலைகளைச் செய்யத் தயாராக உள்ளனர். இதனால் நாட்டின் பொருளாதார மீட்சியானது எந்த வேகத்தில் இறங்கியதோ அதே வேகத்தில் மேலெழும். இந்த வகையிலான மீட்பு இந்தியாவுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.” என சுப்பாராவ் குறிப்பிட்டுள்ளார்.

2008ல் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இந்தியா மிக வேகமாக அதிலிருந்து மீண்டது. தற்போது சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் நடப்பு ஆண்டின் வளர்ச்சி 1.9 என்கிற அளவில் இருக்கும் என கூறியிருந்தது. ஆனால், பல ஆய்வாளர்களின் கணிப்பு காலாவதியானது என்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி எதிர்மறையாக நழுவக்கூடும் என்றும் சுப்பாராவ் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் உஷா தோரத்தும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply