சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கம்!

Share this News:

புதுடெல்லி (13 டிச 2021): கடும் எதிர்ப்பை அடுத்து பத்தாம் வகுப்பு தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வியை சிபிஎஸ்இ நீக்கியுள்ளது.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆங்கிலப் பாடத் தேர்வுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில், பெண்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை நடைமுறைகள் பற்றிய கேள்விகள் இடம்பெற்றிருந்தன.

இதில் பாலின பாகுபாடு, பிற்போக்குத்தனம் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும் வகையில் சிபிஎஸ்இ வினாத்தாள் இருப்பதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தம்மால் நம்பவே முடியவில்லை; இதுபோன்ற அபத்தமான கருத்துகளைத்தான் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறோமா? என கேள்வி எழுப்பினார். பாஜக அரசு இந்த பிற்போக்குத்தனமான கருத்துகளை ஆதரிப்பதாக விமர்சித்துள்ள பிரியங்கா காந்தி, இந்த கருத்துகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஏன் இடம்பெற வேண்டும் என்று வினவினார்.

இவ்விவகாரம் குறித்து மக்களவையில் பேசிய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கேள்வித்தாள் விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் கேள்வி எப்படி இடம் பெற்றது என விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, 10ஆம் வகுப்பு ஆங்கில பாடத்தேர்வு வினாத்தாள், விதிகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய பாடத்திட்டக் குழுவுக்கு அனுப்பப்பட்டுளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கம் அளித்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு கிளம்பியதால் நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று சர்ச்சைக்குறிய கேள்வியை சிபிஎஸ்இ நீக்கியுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

அண்மையில் 12 ஆம் வகுப்பு சமூகவியல் தேர்வில், குஜராத் கலவரம் குறித்து கேட்கப்பட்டக் கேள்வி, விதிமுறைகளுக்கு எதிரானது என சிபிஎஸ்இ நிர்வாகம் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply