செங்கோட்டையில் தேசிய கொடிக்கு பதில் காவி கொடி ஏற்றுவோம் – பாஜக அமைச்சர் சர்ச்சை கருத்து!

Share this News:

பெங்களூரு (10 பிப் 2022): எதிர்காலத்தில் செங்கோட்டையில் தேசியக்கொடிக்கு பதில் காவிக்கொடி ஏற்றப்படும் என கர்நாடக பாஜக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் முஸ்லீம் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவ்விவகாரம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே ஹாசன் அரசு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை காவித் துண்டு அணிந்த‌ ஏபிவிபி அமைப்பினர் சூழ்ந்து கொண்டு ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பினர். அந்த கூட்டத்துக்கு அஞ்சாமல் மாணவி தனியாளாக ‘அல்லாஹ் அக்பர்’ என முழக்கம் எழுப்பிய காட்சி உலகளவில் சமூக வலைத்தளங்களின் வாயிலாக வைரல் ஆனது.

இதற்கிடையே சிவமோகா அரசு கல்லூரியில் தேசியக்கொடிக்கான கொடிக்கம்பத்தில் காவிக்கொடி ஏற்றப்பட்டது. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா, மேலும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பரபரப்பையும், பதற்றத்தையும் அதிகரித்துள்ளார்.

“பல நூற்றாண்டுகளுக்கு முன் ராமனும் மாருதியும் காவிக்கொடியை தங்கள் தேர்களில் ஏற்றிவைத்தார்கள் அல்லவா? எதிர்காலத்திலும் இது சாத்தியம், யாருக்குத் தெரியும்? முன்பு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று சொன்னபோது மக்கள் நம்மைப் பார்த்து சிரிக்கவில்லையா? இன்று நாம் அதை அடைந்துவிட்டோமே?”

இப்போது அரசியலமைப்பு சட்டப்படி நமது தேசியக்கொடியாக மூவர்ணக்கொடி அமைந்துள்ளது. அதனை மதிப்பதும், மரியாதை செலுத்துவதும் இந்தியர்களின் கடமை. இதில் கேள்வி எதுவும் எழுப்புவதற்கில்லை.

இந்து தர்மம் தழைக்க, இன்றோ நாளையோ இந்தியா இந்து நாடாக மாறும். செங்கோட்டையில் கூட காவிக்கொடி இந்தியாவின் தேசியக் கொடியாகியே தீரும்” என்றவர், தற்போது மூவர்ணக் கொடியே தேசியக் கொடி என்றும், அதை மதிக்காத எவரும் துரோகி என்றும் கூறினார்.

பின்னர் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தவர், “தேசியக்கொடிக்கான கம்பத்தில் தேசியக்கொடி இல்லாத போதுதான் அதில் காவிக்கொடியை ஏற்றி இருக்கிறார்கள். தேசியக்கொடியை கீழிறக்கி விட்டு, காவிக்கொடியை ஏற்றவில்லை. காங்கிரஸ் கட்சியின் சிவகுமார் பொய் சொல்கிறார்.

காங்கிரஸ் கட்சிதான் இந்து – முஸ்லிம்கள் இடையே பிரிவினையை திட்டமிட்டு வளர்க்கிறது என்று பதிலுக்கு குற்றம் சாட்டினார்.


Share this News:

Leave a Reply