விசாகப்பட்டினம் பெருவிபத்து வழக்கில் திடீர் திருப்பம் – CEO உட்பட 11 பேர் கைது

கடந்த மே 7-ஆம் தேதி விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில், பிரபல எல்.ஜி. நிறுவனத்திற்கு சொந்தமான, எல்.ஜி. பாலிமர்ஸ் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் விபத்து நாட்டையே உலுக்கியது நினைவிருக்கும்.

இந்த சம்பவத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தைக் குறித்து விசாரிக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமைத்த உயர்மட்ட குழு, தனது விசாரணை அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது.

இதனடிப்படையில் எல்.ஜி. பாலிமர்ஸ் CEO-தலைமை நிர்வாக அலுவலரும் நிர்வாக இயக்குநருமான சுங்கி ஜியோங்,தொழில்நுட்ப இயக்குநர் கிம், கூடுதல் இயக்குநர் ஆகியோரை விசாகப்படினம் காவல் துறை கைது செய்தது. இவர்களைத் தவிர ப்ரொடக்ஷன் டீம் லீடர், மூன்று பொறியாளர்கள், ஒரு ஆபரேட்டர், இரவுக் காப்பாளர், இரவு நேர பாதுகாப்பு அலுவலர் மற்றும் GPPS எனும் அந்த வேதிப் பொருளுக்குரிய பொறுப்பாளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த பெரும் விபத்து, பெருந்தொழில் நிறுவனங்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் விஷயத்தில் எத்துணை அலட்சியமாக செயல்படுகின்றன என்பதையும், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி எவ்வாறு பல்வேறு துறைசார் அனுமதியையும் பெற்றுவிடுகின்றன என்பதையும் பட்டவர்த்தனமாகக் காட்டியது.

சுற்றுச்சூழல், காடுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்ந்த சிறப்புத் தலைமைச் செயலாளர் நீரப் குமார் பிரசாத் அவர்களுடைய தலைமையில் அமைக்கப்பட்ட இ‌ந்த குழு, அந்த தொழிற்சாலையில் விபத்து குறித்து முன்னெச்சரிக்கை செய்யக்கூடிய தொழில்நுட்ப வசதிகள் எதுவும் சரியான முறையில் செயல்படவில்லை எனவும், எச்சரிக்கை ஒலி எழுப்பக்கூடிய “சைரன்” சரியான முறையில் நிர்மாணிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் தனது 4000 பக்க அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கின்றது.

ஏற்கனவே, தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த விபத்து குறித்து சமர்ப்பித்த அறிக்கையில், இந்த விபத்துக்குக் காரணம், “அந்த தொழிற்சாலையின் பாதுகாப்பு அமசங்களில் இருந்த அலட்சியப் போக்குதான்” என குற்றஞ்சாட்டி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிருங்கள்: