கத்தரில் சட்டமன்றத் தேர்தல்!

Share this News:

ரும் அக்டோபர் 2 ஆம் தேதி கத்தரில் சட்டமன்றத்துக்கான 30 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்குரிய தேர்தல் நடைபெற உள்ளது. அமீருக்கான ஆலோசனை குழு-ஷூரா கவுன்ஸில்- என்றிருந்ததை, அரசில் மக்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கத்தர் வரலாற்றில் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னர், இந்த ஆலோசனை குழுவின் உறுப்பினர்களை அமீரே நேரடியாக தேர்வு செய்வார். தற்போதைய மாற்றப்படி, முன்னர் அமீருக்கு இருந்த அதிகாரம் அப்படியே தொடரும். அதன்படி, 15 உறுப்பினர்களை அமீர் நேரடியாக நியமிப்பார். கூடுதலாக 30 சட்டமன்ற தொகுதிகளிலிருந்து மக்கள் வாக்களித்து நேரடியாக தேர்வு செய்வர். ஆக, கத்தர் சட்டமன்றம் 45 உறுப்பினர்களைக் கொண்டதாக அமையும்.
இம்மன்றத்துக்கு அரசின் கொள்கைகள் மற்றும் புதிய சட்டங்களை வகுக்கும், திருத்தும், தள்ளுபடி செய்யும் அதிகாரம் இருக்கும். கூடுதலாக, பட்ஜெட்டும் இம்மன்றக் கட்டுப்பாட்டில் இருக்கும்.
கத்தரில் ஏற்கெனவே உள்ளாட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை மக்கள் தேர்வு செய்துவருகின்றனர். ஆட்சி அதிகாரத்திலும் மக்கள் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் வகையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், 15 உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் இன்னமும் அமீரிடம் இருப்பதால், இது முழுமையான ஜனநாயக அமைப்பு முறை இல்லை என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர். எனினும், ஆட்சியில் மக்களை நேரடியாக பங்களிப்பு செய்ய வைக்கும் வகையிலான கத்தரின் மாற்றங்கள் வளைகுடா நாடுகளுக்கே முன்மாதிரியானவை என்றும் கருத்து கூறியுள்ளனர்.
அரசின் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. ஏற்கெனவே உள்ளாட்சி அமப்புகளிலும் அவர்கள் போட்டியிட்டு வென்றுள்ளனர். ஷூரா கவுன்ஸிலில் அமீர் நேரடியாக 4 உறுப்பினர்களை நியமித்துள்ளார். தற்போதைய சட்டமன்றத் தேர்தலிலும் 29 பெண்கள் போட்டிகளத்தில் உள்ளனர்.
ஆட்சியில் குடிமக்கள் அனைவரின் பங்களிப்பையும் சமூகத்தின் அத்தனை உட்பிரிவுகளின் பிரதிநிதித்துவத்தையும் உட்படுத்தும் வகையிலான மாற்றங்களைச் செய்வதில் கத்தர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தலில் ஓட்டளிக்கும் அதிகாரம் கத்தரின் குடிமக்களுக்கு மட்டுமே உண்டு என்ற சட்டத்துக்கு மட்டும், அல் முர்ரா நாடோடி கோத்திரத்திலிருந்து சிறு எதிர்ப்பொன்று உருவானது. கத்தர் பூர்வீகக் குடிகளின் வாரிசுகள் மற்றும் குடிமக்களுக்கு மட்டுமே வாக்களிக்கவும் சட்டமன்றத்துக்குப் போட்டியிடவுமான அதிகாரமுண்டு என்பதில் மாற்றம் வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அனைத்து மக்களையும் அனைத்து பிரிவினரையும் உட்படுத்தி, அனைவருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கி புதியதொரு மாற்றத்தை நோக்கிய கத்தரின் முன்னேற்றம் பொதுவாக அனைவரிடமிருந்தும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Share this News:

Leave a Reply