அச்சுறுத்தும் புதுவகை கொரோனா வைரஸ்!

Share this News:

தென் ஆப்பிரிக்கா (26 நவ 2021): உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருந்த நிலையில், தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மக்களின் அன்றாட வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு அச்சுறுத்தலை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் ஏற்கெனவே நாம் அடையாளப்படுத்திய கொரோனா வைரஸ்களை காட்டிலும் வேறுபட்டுள்ளது. சாதாரணமாக கொரோனா வைரஸ்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எளிதாக பரிணாமமடையக்கூடியதாகும். அந்த வகையில் B.1.1.529 என பெயரிடப்பட்ட இந்த வகை கொரோனா வைரஸ் ஏறத்தாழ 50 முறை பரிணாமடைந்து (மரபியல் மாற்றமடைந்து) எந்த சூழலிலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் வகையில் தகவமைத்துக்கொண்டுள்ளது.

இதனால் நாம் ஏற்கெனவே கண்டறிந்த தடுப்பூசிகளும் B.1.1.529 வகை கொரோனா வைரசுக்கு எதிராக திறம்பட செயல்படுமா என்பது கேள்விக்குறியாக முன்னெழுந்துள்ளது.

இந்த ஆபத்தை உணர்ந்த பிரிட்டன், சிங்கப்பூர், இஸ்ரேல், ஜெர்மன், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் 6 ஆப்பிரிக்க நாடுகளுடன் விமான சேவையை தடை செய்துள்ளது. கடந்த வாரம் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் பாதித்துள்ளது. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்கா தவிர்த்து அண்டை நாடான போட்ஸ்வானாவிலும் இந்த வைரஸ் பாதிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேபோல தென் ஆப்பிரிக்கா பிராந்தியத்திலிருந்து ஹாங்காங் வந்த இருவருக்கும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரிபு வைரஸ் குறித்து மேலும் புரிந்துகொள்ள அதிக ஆய்வுகள் தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வமைப்பின் தொழில்நுட்பத் தலைவர் டாக்டர், மரியா வான் கெர்கோவ் அனைவரும் இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா மற்றும் ஹாங்காங் நாடுகளிலிருந்து வரும் பயணிகளை கடுமையான சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்த இந்தியா முடிவெடுத்துள்ளது. சமீபமாக தொற்று பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில், சர்வதேச விமான போக்குவரத்தை மத்திய அரசு மீண்டும் தொடங்கியது. இதன் காரணமாக புதிய வகை தொற்று அச்சுறுத்தல் ஏற்படும் என விமான போக்குவரத்துத்துறை அச்சம் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply