கொரோனா எதிரொலி – ஈரோட்டில் தாய்லாந்திலிருந்து வந்தவர்கள் சென்ற பகுதிகள் முழுவதும் மூடல்!

Share this News:

ஈரோடு (23 மார்ச் 2020): கொரோனா பரவல் எதிரொலியாக ஈரோட்டில் தாய்லாந்து நாட்டினர் சென்று வந்த 9 வீதிகளில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 பேர் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு மத வழிபாட்டிற்காக வருகை புரிந்தனர். அவர்கள் ஈரோடு கொல்லம்பாளையம் சுல்தான் பேட்டை மசூதியில் தங்கி, மத வழிபாட்டில் ஈடுபட்டனர். அவர்களில் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ஈரோடு புதுமஜித் வீதியில் உள்ள சின்ன பள்ளிவாசல்(மசூதி) பகுதியில் இன்று காலை மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தலைமையில் சுகாதார துறையினர், தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினிகளை தெளித்து சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

மேலும், சின்ன பள்ளிவாசல் சுற்றுப்புற பகுதியான புது மஜித் வீதி, கொங்காலம்மன் கோயில் வீதி, கிழக்கு கொங்காலம்மன் கோயில் வீதி உள்ளிட்ட 9 வீதிகளிலும் போக்குவரத்திற்கு முழுமையாக தடை விதித்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த 9 வீதிகளிலும் செயல்பட்டு வந்த மொத்த மளிகை வியாபார கடைகள், காலணி, அரிசி கடைகள் உள்ளிட்டவகளை மூட மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உத்தரவிட்டார்.

மேலும், கடைகளை திறந்தால் சீல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இதன்பேரில், கொங்காலம்மன் கோயில் வீதி உள்ளிட்ட 9 வீதிகளில் செயல்பட்ட அனைத்து கடைகளும் இன்று மூடப்பட்டு காணப்பட்டன.


Share this News:

Leave a Reply