விபத்துக்கான 48 மணி நேர இலவச சிகிச்சை – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Share this News:

சென்னை 919 டிச 2021): தமிழகத்தின் எந்த பகுதியில் சாலை விபத்து நடந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் என 609 மருத்துவமனைகளில் 48 மணி நேரத்துக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டமான ‘இன்னுயிர் காப்போம் திட்டத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில், சாலை விபத்தில் படுகாயம் அடைபவர்களுக்கு அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனையில் 48 மணி நேரம் இலவச சிகிச்சை அளிக்கும் வகையில், “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48’’ என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

இதில் இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்படி
* சாலை விபத்தினால்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்‌ 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும்.

* இத்திட்டத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக, முதலமைச்சரின்‌ மருத்துவக காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர்‌, வேறு நாட்டவர்‌ என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் – அதாவது தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர் அனைவருக்கும் முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

* சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் சிகிச்சை அளிக்கப்படும்.

* 48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிலையற்றவராக இருந்தால் அல்லது மேலும் தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால், முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அல்லது தகுந்த வழிகாட்டுதல்களின்படி தொடர் சிகிச்சைகள் நிச்சயமாக வழங்கப்படும்.


Share this News:

Leave a Reply