முஸ்லிம்களை படுகொலை செய்யுங்கள் – அதிர்ச்சி அடைய செய்யும் இந்துத்வா அமைப்பினரின் மாநாடு!

Share this News:

புதுடெல்லி (25 டிச 2021): முஸ்லிம்களை படுகொலைச் செய்ய வேண்டும் என்று உத்தர்காண்டில் நடைபெற்ற இந்துத்துவா மாநாட்டில் பிரகடனம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர்காண்ட் மாநிலம் ஹரித்வாரில் பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் இணைந்து நடத்திய ‘தர்ம சன்சத்’ என்ற பெயரில் இந்துத்துவ மாநாடு நடந்தேறியுள்ளது. அதில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளும் முஸ்லிம்களை கொலை செய்ய வேண்டும் என்பதாகவும் பிரகடனப்படுத்தப்பட்டள்ளது.

இந்த மாநாடு டிசம்பர் 17 முதல் 19 வரை நடைபெற்றது. விழாவில் பேசிய தலைவர்கள் சிறுபான்மையினரைக் கொலை செய்ய வேண்டும் என்றும் , அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் எனவும் பேசியுள்ளனர்.

மேலும் இந்து மகாசபையின் பொதுச் செயலாளர் சாத்வி அன்னபூர்ணா பேசும்போது, ‘முஸ்லிம்களை படுகொலைச் செய்ய வேண்டும். ஆயுதங்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. அவர்களைக் கொன்றுவிட்டு சிறைச் செல்ல தயாராகுங்கள். 20 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடிய 100 வீரர்கள் தேவை’ என்று கூறியுள்ளார்.

அதேபோல ஏற்கனவே பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு விடுதலையாகியுள்ள பாஜக தலைவர் அஷ்வினி உபாத்யாய், மகிளா மோர்ச்சா தலைவர் உதித் தியாகி மற்றும் இந்து ரக்ஷா சேனா தலைவர் சுவாமி பிரபோதானந்த கிரி ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த மாநாட்டின் காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வருகின்றன. இந்த நிகழ்ச்சியை நடத்திய தலைவர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் மீது உத்தர்காண்ட் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே டென்னிஸ் ஜாம்பவான் மார்டினா நவ்ரதிலோவா இந்த வீடியோவை அவரது சமூக வலைதளத்தில் பதிந்து அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply