கத்தாரில் வயிற்றுக்குள் மறைத்து ஹெராயின் கடத்தல்!

வயிற்றுக்குள் மறைத்து போதை மருந்து கடத்தல்
Share this News:

தோஹா, கத்தார் (25 டிசம்பர் 2023): கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவின் ஹாமத் சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் தன் வயிற்றுக்குள் மறைத்து ஹெராயின் கடத்தல் செய்ததை, சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பயணியின் நடவடிக்கை பற்றி சுங்கப் பரிசோதகருக்கு எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்து, பயணி மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

சினிமா பாணியில் ஹெராயின் கடத்தல்:

காவல்துறையினர் மேற்பார்வையில், தனியறையில் நடந்த பரிசோதனையின் முடிவில், பயணியின் வயிற்றில் 376 கிராம் எடையுள்ள ஹெராயின் மற்றும் 107 கிராம் எடையுள்ள ஷாபு அடங்கிய 81 பூசப்பட்ட காப்ஸ்யூல்கள் கைப்பற்றப்பட்டன.

நடிகர் சூர்யா நடித்து, கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அயன். இதில், மாத்திரை வடிவில் விழுங்கி வயிற்றுக்குள் போதை மருந்து ஹெராயின் கடத்தல் நடப்பதாகக் காட்சிகள் அமைக்கப் பட்டு இருந்தன. இதே வழியை கத்தாரில் கடத்தல்காரர்கள் பின்பற்றியுள்ளனர். (இந்நேரம்.காம்)

கடும் தண்டனைகள்:

கத்தார் நாட்டிற்கு போதைப் பொருட்களை கொண்டு வருவது பெரும் குற்றமாக கருதப்படுகிறது.  சட்ட விரோதமான இச்செயலுக்கு கடுமையான தண்டனைகள் உண்டு.

பயணிகள் கொண்டு வர தடை செய்யப் பட்ட பல்வேறு பொருட்கள் பற்றிய அறிவிப்பை கத்தார் சுங்க ஆணையம் பலமுறை எச்சரித்துள்ளது.

எனினும், இது பற்றி அறியாமல் அவ்வப்போது போதைப் பொருட்கள் கடத்தப் படுவதும், சிக்கி கைது ஆகும் நபர்கள் பல வருட சிறைத் தண்டனை, பெரும் தொகை மற்றும் பல்வேறு தண்டனைகளை அனுபவிப்பதும் வழக்கம்.

கத்தார் விமான நிலையங்களில் அதிநவீன A.I தொழில் நுட்பங்களுடன் கூடிய Scanning பரிசோதனைகள் உண்டு.

புதிய தொழில் நுட்பப்படி பயணிகளின் உடல் மொழிகள் நுணுக்கமாகக் கண்காணிக்கப் படுகின்றன. மேலும், போதைப் பொருட்களைக் கடத்த, கடத்தல்காரர்கள் பின்பற்றும் புதிய டெக்னிக்-ளைப் பற்றி கத்தார் சுங்கத்துறை, தமது அதிகாரிகளுக்கு அவ்வப்போது பயிற்சிகள் அளித்து வருவது குறிப்பிடத் தக்கது.

  • நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

Share this News: