கத்தாரில் பரவும் டெங்கு காய்ச்சல்!

கத்தாரில் பரவும் டெங்கு காய்ச்சல்
Share this News:

தோஹா, கத்தார் (23 டிசம்பர் 2023): கத்தாரில் கொசுக்களின் மூலம் ஏற்படும் டெங்கு காய்ச்சல் நோய் அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் குறிப்பிட்ட வகை கொசுக்கள் கத்தாரில் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது.

மேலும், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸிலிருந்து மக்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து கத்தார் நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

கத்தார் நாட்டில் பொதுவாக கொசுக்கள் கிடையாது. ஆனால், காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால், கத்தார் நாட்டில் கொசு இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக MoPH குறிப்பிட்டுள்ளது. சமீபத்திய பெய்த தொடர் மழையின் காரணமாகவும் இந்த பெருக்கம் அதிகரித்துள்ளது.

உலகளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில், டெங்கு காய்ச்சல் வைரஸ் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன? எப்படி பரவுகிறது?

இது ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது ஏடிஸ் எஜிப்டி (Aedes Aegypti) எனப்படும் வைரஸை சுமந்து செல்லும் கொசு ஒருவரைக் கடிக்கும் போது பரவத் துவங்குகிறது.

டெங்கு காய்ச்சல் தொற்று நோயா?

இது தொற்று நோய் அல்ல என்றும் சாதாரண தொடர்பு மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது என்றும் கத்தார் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

காய்ச்சல் அறிகுறிகள்:

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு (கொசுவால் கடிக்கப்பட்ட) நான்கு முதல் பத்து நாட்களுக்குள் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

கடும் காய்ச்சல், தலைவலி, கண்வலி, உடல்வலி, குமட்டல் மற்றும் சொறிதல் ஆகியவை அறிகுறிகளாக கருதப்படுகின்றன. டெங்கு காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலருக்கு அறிகுறிகள் ஏதும் உருவாகாமல் கூட இருக்கலாம். (இந்நேரம்.காம்)

காய்ச்சல் ஏற்பட்டால் என்ன செய்வது?

மேற்கூறிய அறிகுறிகள் எவருக்காவது ஏற்பட்டால்,  அவர்கள் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் செல்லுமாறு பொது சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

“சாதாரண பாதிப்புகளுக்கு சிறிய சிகிச்சை போதுமானது; கடுமையான பாதிப்புகள் இருந்தால் மட்டும் மேல் மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்க நேரிடும்;

கத்தாரில் இந்நோய் பரவுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. கத்தாரில் டெங்கு காய்ச்சலின் நிலைமையை அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

மேலும் கொசுக்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த நகராட்சி அமைச்சகம் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.”

இவ்வாறு கத்தார் நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) தெரிவித்துள்ளது.

  • நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

Share this News: