ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை விளம்பரத்தில் சாவர்க்கர் படம்!

Share this News:

மாண்டியா (06 அக் 2022): காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையை ஊக்குவிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், இந்துத்துவா சித்தாந்தவாதியான வி.டி.சாவர்க்கரின் படம் மீண்டும் இடம் பெற்றுள்ளது.

கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற்று வரும் நிலையில், மாண்டியாவில் அமைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் போர்டில் சாவர்க்கரின் படம் வைக்கப்பட்டது. சாந்திநகர் எம்.எல்.ஏ என்.ஏ.ஹாரிஸ் பெயரில் ஃப்ளக்ஸ் ஒட்டப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த போஸ்டர் தாங்கள் ஒட்டவில்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏ விளக்கம் அளித்துள்ளார்.

சாவர்க்கருடன், ராகுல் காந்தி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் வி.டி.சிவக்குமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரின் படங்களும் இந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, ஹாரிஸ் எம்எல்ஏ இதுகுறித்து விளக்கம் அளித்தார் – “இது சமூக விரோதிகளால் செய்யப்பட்டது. நாங்கள் அல்ல என்றும் இதுகுறித்து மண்டியா காவல்துறையில் புகார் கொடுப்போம்”.என்றும் அவர் தெரிவித்தார்.

மாண்டியா பகுதிக்கான பயணத்தில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும் இன்று பங்கேற்றார். இந்நிலையில், சாவர்க்கரின் படத்துடன் கூடிய போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

முன்னதாக, கேரளாவிலும் பாரத் ஜோடோ யாத்ராவின் பிரச்சார பேனரில் சாவர்க்கரின் படம் இடம்பெற்றிருந்தது. எர்ணாகுளம் அத்தானியில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களுடன் சாவர்க்கரின் படமும் சேர்க்கப்பட்டது. சர்ச்சைக்குப் பிறகு, இந்தப் படத்தின் மேல் மகாத்மா காந்தியின் படம் வைக்கப்பட்டது. உள்ளூர் ஆர்வலர் ஒருவரால் பேனர் வைக்கப்பட்டது என்றும் இது தற்செயலான தவறு என்றும் தலைமை அப்போது விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply