ஆர் எஸ் எஸ் அலுவலகம் செல்ல, என் தலை வெட்டப்பட வேண்டும் -ராகுல் காந்தி!

Share this News:

புதுடெல்லி (17 ஜன 2023): காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

பல்வேறு மாநிலங்களுக்குப் பயணித்துள்ள ராகுல் காந்தி, தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம், ஹோசியார்பூரில் செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி இன்று பேட்டியளித்தார்.

அப்போது அவரிடம் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனும், பா.ஜ.க. எம்.பி.யுமான வருண் காந்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி “வருண் காந்தி பா.ஜ.க.வில் உள்ளார். அவர் என்னுடைய இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு வந்தாலோ அல்லது கலந்து கொண்டாலோ அவருக்கு பிரச்சினையாகி விடும். அவர் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர். ஆனால் எனக்கு அது ஒத்து வராது. வருண் காந்தியை நேரில் சந்தித்தால் அவரை கட்டியணைத்துக் கொள்வேன். ஆனால் அவரது சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.” என்றார்.

மேலும் “நான் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்குச் செல்லமாட்டேன். அப்படி ஒரு சூழல் வந்தால் அதற்கு முன்பாக நான் என் தலையை வெட்டிக் கொள்வேன். என் உடலை வேண்டுமானால் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லலாம்.” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply