பஞ்சாப் முதல்வரின் மருமகன் கைது!

புதுடெல்லி (04 பிப் 2022): பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபேந்திர சிங் ஹனி,மணல் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப்பில் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 10-ம் தேதி முடிவுகள் வெளியாகிறது.

இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபேந்திர சிங் ஹனியை நேற்று மாலை காவலில் எடுத்த அமலாக்கத்துறை, இன்று அவரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது. பணமோசடி தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) விதிகளின் கீழ் ஹனி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த மாதம், பஞ்சாபில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது தொடர்பாக ஹனிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது ரூ.8 கோடியை அமலாக்கத்துறை கைப்பற்றியது. இந்த சோதனையில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் சொத்து பரிவர்த்தனைகள் தொடர்பான குற்றச்சாட்டு ஆவணங்கள், மொபைல் போன்கள், ரூ.21 லட்சத்துக்கும் அதிக மதிப்புள்ள தங்கம், ரூ.12 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்க இயக்குநரகம் தெரிவித்தது.

இந்தச் சோதனைகள் குறித்து பதிலளித்த முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ,”மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலின்போது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர்களிடம் சோதனை செய்யப்பட்டதாகவும், பஞ்சாபிலும் தற்போது அதே முறையை பின்பற்றி வருகிறார்கள். இந்த அழுத்தத்தை சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்,

117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டப் பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இந்த கைது சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply