நிர்பயா வழக்கு: தூக்குத் தண்டனை இப்போது இல்லை – டெல்லி அரசு!

Share this News:

புதுடெல்லி (15 ஜன 2020): நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு வரும் ஜனவரி 22 ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில், டெல்லி அரசு அந்த தேதியில் நிறைவேற்றப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் வரும் ஜன 22 ஆம் தேதி தூக்குத் தண்டனை பெற உள்ள நிலையில், அவர்களில் ஒருவரான முகேஷ் சிங் கருணை கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த மனுவைக் காரணமாக சொல்லித்தான் தூக்குத் தண்டனையை தற்போதைக்கு நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று டெல்லி அரசும் மத்திய அரசும் தெரிவித்துள்ளன.

திகார் சிறை சார்பில், டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ராகுல் மேஹ்ரா, ‘தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னர், கருணை மனு குறித்தான ஜனாதிபதியின் பதிலுக்குக் காத்திருக்க வேண்டும். அதேபோல கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னரும், குற்றவாளிகளுக்கு 14 நாட்கள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஜனாதிபதி, கருணை மனுவை நிராகரித்த பின்னர்தான் தண்டனையை நடைமுறைப்படுத்த முடியும்,’ என்று நீதிபதிகள் மன்மோகன் மற்றும் சங்கித் திங்கரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வில் வாதம் வைத்தார்.

கருணை மனுவுக்கு முன்னர், உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, குற்றவாளிகள் வினய் ஷர்மா மற்றும் முகேஷ் ஆகியோர், தூக்குத் தண்டனை குறித்தான மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தனர். அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, முகேஷ் சிங் தற்போது, குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். முகேஷ் சிங் உள்ளிட்ட 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ஜனவரி 22-ம் தேதி நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply