ஹிஜாப் தடை காரணமாக தேர்வை புறக்கணித்த 20 ஆயிரம் மாணவிகள்!

Share this News:

பெங்களூரு (29 மார்ச் 2022): கர்நாடகத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சிதேர்வு எழுதாத விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 73 ஆயிரத்து 846 பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 732 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 21 ஆயிரத்து 110 பேர் மாணவிகள். 4 பேர் 3-ம் பாலினத்தவர்கள். 3 ஆயிரத்து 444 தேர்வு மையங்களில் இந்த தேர்வுகள் நடந்தது. நேற்று கன்னடம், தமிழ், தெலுங்கு உள்பட முதல் மொழி தேர்வுகள் நடந்தது.

ஹிஜாப் விவகாரத்தாலும், அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையிலும் தேர்வுகள் நடந்த கல்வி நிறுவனங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. மேலும் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

தேர்வு எழுத வந்த சில முஸ்லிம் மாணவிகள் வீடுகளில் இருந்து ஹிஜாப் அணிந்து வந்தனர். ஆனால் தேர்வு மையங்களுக்குள் ஹிஜாப்பை அணிந்து செல்லவில்லை. மேலும் ஒரு சில பகுதிகளில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு தேர்வு அறைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, ஹிஜாப் அணிந்து கொண்டு தேர்வு மையத்திற்குள் செல்லாதது வருத்தம் தான். வீட்டில் இருந்து ஹிஜாப் அணிந்து வந்தோம். எங்கள் படிப்புக்காக தேர்வு அறைக்குள் ஹிஜாப் அணிந்து செல்லவில்லை. எங்களுக்கு ஹிஜாப், கல்வி இரண்டும் முக்கியம் தான். என்று கூறினர்.

ஒரு சில இடங்களில் ஹிஜாப்புடன் தேர்வு அறைக்குள் நுழைய முயன்ற மாணவிகளை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்கள் ஹிஜாப்பை கழற்றிய பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத 8 லட்சத்து 69 ஆயிரத்து 399 மாணவர்கள் தகுதியாகி இருந்தனர். இதில் 8 லட்சத்து 48 ஆயிரத்து 405 மாணவ-மாணவிகள் தேர்வுக்கு ஆஜராகினர். ஆனால் 20 ஆயிரத்து 994 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதவில்லை. கடந்த 2021-ம் ஆண்டு தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை 3,769 ஆகும்.

ஆனால் இந்த ஆண்டு தேர்வுக்கு ஆஜராகாத மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஹிஜாப்புக்கு தடை விதிக்கப்பட்டதால் முஸ்லிம் மாணவிகள் பலர் தேர்வுக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதாத விவகாரம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply