பீகாரில் ஆட்சியை பிடிக்கும் லாலுவின் மகன் – கருத்துக் கணிப்புகள் தகவல்!

Share this News:

பாட்னா (08 நவ 2020): பீகாரில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் 243 இடங்களை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.

நேற்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. பீகாரில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவைப்படுகின்றன.

அந்த வகையில் கருத்துக்கணிப்பு முடிவுகள், அங்கு லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என கூறுகின்றன.

இந்த கூட்டணி 116-138 இடங்களை பிடிக்கும் என ரிபப்ளிக் டி.வி., ஜன் கி பாத் கருத்துக்கணிப்பும், 120 இடங்களில் வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் சி வோட்டர் மற்றும் டி.வி.9 பாரத் வர்ஷ் கருத்துக்கணிப்பும், 108-131 இடங்களில் வெற்றி பெறும் என ஏ.பி.பி. நியூஸ், சி வோட்டர் கருத்துக்கணிப்பும் கூறுகின்றன.

அதே நேரத்தில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ.க. கூட்டணி 91-119 இடங்களில் வெற்றி பெறும் என ரிபப்ளிக் டி.வி., ஜன் கி பாத் கருத்துக்கணிப்பும், 116 இடங்களில் வெல்லும் என டைம்ஸ் நவ் சி வோட்டர் கருத்துக்கணிப்பும், 115 இடங்களை கைப்பற்றும் என டி.வி.9 பாரத் வர்ஷ் கருத்துக்கணிப்பும், 104-128 இடங்களை பிடிக்கும் என ஏ.பி.பி. நியூஸ், சி வோட்டர் கருத்துக்கணிப்பும் கூறுகின்றன.

முன்னாள் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி ஒற்றை இலக்க இடங்களை மட்டுமே கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

தேர்தல் முடிவுகள் வரும் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது.


Share this News:

Leave a Reply