அரசியலாகும் தூதரக தங்கக் கடத்தல் விவகாரம்!

திருவனந்தபுரம் (09 ஜூலை 2020): கேரளாவில் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகப் பெயரில் சரக்கு விமானத்தில் வந்த பொருட்களை கடந்த 5-ஆம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அதில் 30 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வரும் கும்பல் ஒன்றுதான் இந்த தங்கத்தையும் அனுப்பி இருக்கக்கூடும் என்று தெரிகிறது. வழக்கமாக சுங்கப் பரிசோதனைகளில், தூதரகப் பார்சல் பொருட்களுக்கு விலக்கு இருப்பதால், இந்த புதிய நூதன வழியை கடத்தல்காரர்கள் பயன்படுத்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஐக்கிய அரபு தூதரகப் பெயரில் தங்கம் கடத்தப்பட்டதால் அது குறித்து உயர்மட்ட விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பிறகு, தூதரக முன்னாள் ஊழியரான சரித் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆனால். இந்த கடத்தலின் பிரதான முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் தற்போது தலைமறைவாகி உள்ளார். அவரை கைது செய்வதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் அவர் சார்பாக முன்ஜாமீன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான அம்சம் என்னவெனில், இந்த ஸ்வப்னா சுரேஷ், 2016 முதல் 2019 வரை தூதரகத்தில் முதன்மைச் செயலராக பணியாற்றி வந்தார்.தற்போது கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர். இவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் கேரள விமான நிலையத்தில் சிக்கிய தங்கத்தை சப்தமின்றி விடுவிக்குமாறு முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து முக்கிய அதிகாரி ஒருவர் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசியில் உத்தரவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பினராயி விஜயனின் முதன்மை செயலாளரும், ஐ.டி. துறை செயலாளருமான சிவசங்கர் மீது சந்தேகம் வலுத்து வருவதாக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சந்தேகத்துக்கு வலுசேர்க்கும் வகையில், முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து சிவசங்கர் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். எனினும் ஐ.டி. துறை செயலாளராகவும் இருக்கும் அவருடைய பதவி பறிக்கப்படவில்லை.

இந்த கடத்தலில், முதல்வர் அலுவலகத்தின் பெயரும் அடிபடுவதால், கடத்தலில் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளன.

இந்த மோசமான செயல் தொடர்பான விசாரணையில் உடனடியாக தலையிட்டு நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமீரகத்துடனான நீண்டகால நட்புக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநில எதிர்க் கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதலா பிரதமர் மோடிக்கு கடிதமே எழுதிவிட்டார்.

வழக்கம்போல், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கும், ஒரே ஒரு எம்எல்.ஏ.-வைக் கொண்ட கேரள பா.ஜ.க., “முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி கேரள அரசியலில் பெரும் பரபர ப்பு கிளப்பிய, சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் தனக்கு தொடர்பு இல்லை என கூறியதையே, இந்த தங்கம் கடத்தல் விவகாரத்திலும் பினராயி விஜயனும் ஒப்புவித்து வருவதாகவும்” கூறி வருகின்றது.

இந்நிலையில், அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுதலித்த முதல்வர் பினராயி விஜயன், நியாயமான மற்றும் கூட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என இன்று பிரதமர் மோடிக்கு, கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கிடையே தகவல் தொழில்நுட்பச் செயலாளராக இருக்கும் சிவசங்கரன், கேரள முதல்வர் பினராயி விஜயனின் தனிச்செயலாளராகவும் கூடுதலாகப் பதவி வகித்து வந்தார். இந்தப் புகார் எழுந்ததையடுத்து, இரு பதவியிலிருந்தும் சிவசங்கரனை கேரள அரசு நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிருங்கள்: