ஹிஜாப் விவகாரம் – முஸ்லிம் மதகுருமார்கள் சர்வமத தலைவர்களுடன் ஆலோசனை!

Share this News:

புதுடெல்லி (11 பிப் 2022): ஹிஜாப் விவகாரத்தில் தீர்வு காண முஸ்லிம் மத குருமார்கள் பல்வேறு மத தலைவர்களுடன் ஆலோசனை நடத்த முடிவெடுத்துள்ளனர்.

கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்விவகாரம் நாடெங்கும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இந்நிலையில் நாட்டில் பரவி வரும் வெறுப்புக்கு எதிராக தீர்வு காண இஸ்லாமிய மையத்தின் (ஐசிஐ) மதகுருமார்கள் பல்வேறு மத தலைவர்களுடன் சர்வமத மாநாட்டை நடத்தவுள்ளனர்.

இதுகுறித்து ஐசிஐ தலைவர் மௌலானா காலித் ரஷீத் ஃபராங்கி மஹாலி கூறுகையில், “ஹிஜாப் என்பது ஒரு முஸ்லீம் பெண்ணின் மதக் கடமையாகும், மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 25வது பிரிவின்படி ஒவ்வொரு குடிமகனும் தங்கள் விருப்பப்படி தங்கள் மதத்தை பின்பற்ற அனுமதிக்கிறது. மாணவர்கள் ஹிஜாப் அணிந்து கல்வி நிறுவனங்களுக்குச் செல்வதைத் தடுப்பது அவர்களின் மத சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

“அமைதி, செழிப்பு மற்றும் நமது தேசத்தின் எதிர்காலம் ஆகியவற்றிற்கான பொதுவான தீர்வைக் கொண்டு வர, பல்வேறு மதங்களின் தலைவர்களுடன் ஹிஜாபின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம் செய்யப்படும் வெறுப்புக்கு எதிராக விரைவில் சர்வமத மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்விக்கான உரிமையை உறுதி செய்கிறது. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்தும் கர்நாடக அரசு அரசியல் சாசன உரிமைகளை பறிக்கிறது” என்றார்.

இந்த விவகாரம் குறித்து கவலை தெரிவித்த மதகுரு, சக மாணவர்களின் மதத்திற்கு எதிராக மாணவர்களை தூண்டினால், நாட்டின் எதிர்காலம் கவலைக்கிடமாக இருக்கும் என்றார். மேலும் மாநாட்டின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக ஐசிஐயில் நடந்த கூட்டத்தில், குர்ஆன் மற்றும் முகமது நபியின் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளபடி, பெண்களுக்கு ஹிஜாபின் முக்கியத்துவத்தை மதகுருமார்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.


Share this News:

Leave a Reply