இந்தியா இருளில் மூழ்கும் அபாயம்!

Share this News:

புதுடெல்லி (14 அக் 2021): இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலக்கரி பற்றாக்குறையால் மின் பற்றாக்குறை ஏற்பட்டு இந்தியா இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நிலக்கரிக்கு தற்போது ஏற்பட்டுள்ள இந்த திடீர் பற்றாக்குறையால், மின் உற்பத்திக்கு நிலக்கரியைப் பெரிதும் நம்பியிருந்த பல்வேறு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி விலை பல மடங்கு அதிகரித்ததுள்ளது. இதனால் சீனா உட்பட பல்வேறு நாடுகளிலும் நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு ஏற்படத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் சுமார் 60% மின் உற்பத்தி அனல் மின் நிலையங்களிலிருந்தே நமக்குக் கிடைக்கிறது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு அனல் மின் நிலையங்களிலும் அடுத்த சில நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஆந்திரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட அரசுகள் ஏற்கனவே மத்திய அரசிடம் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளன. மேலும், பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் மின் பற்றாக்குறை தொடங்கிவிட்டது.

இந்தியாவில் மின்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர்கள் கூறினாலும், மத்திய அரசு நிலைமை கையை மீறிச் செல்லாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சர்வதேச அளவில் அதிக அளவில் நிலக்கரியை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2ஆம் இடத்தில் உள்ளது. மத்திய அரசின் நிலக்கரியை அதிகம் கையிருப்பில் வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2ஆம் இடத்தில் உள்ளது.

இருப்பினும், தற்போதைய மின் தேவை திடீரென கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்ட தொடங்கியுள்ளது. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

இதனால் கோல் இந்தியா நிறுவனத்திடம் இருக்கும் கையிருப்பு கூட போதாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமையைச் சமாளிக்கக் கோல் இந்தியா நிறுவனமும் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக மின் உற்பத்தியைத் தவிரப் பிற தேவைகளுக்கு நிலக்கரி வழங்குவதை அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

மேலும், நிலக்கரி இறக்குமதியை அதிகரிக்கும் நடவடிக்கைகளிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது. மின்சாரத்தை அதிக விலைக்கு முறைகேடாக வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இருப்பினும் நிலைமையை சமாளிக்க மேலும் பல நடவடிக்கைகளை. அரசு மேற்கொள்ளவேண்டும்.


Share this News:

Leave a Reply