மத்திய பிரதேசத்திலும் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்த கல்லூரி!

Share this News:

போபால் (15 பிப் 2022): கர்நாடகாவில் தொடங்கிய ஹிஜாப் தடை விவகாரம் தற்போது மத்திய பிரதேசத்திற்கும் பரவியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில், டாடியா மாவட்டத்தில் உள்ள அக்ரானி அரசு தன்னாட்சி முதுநிலை கல்லூரி திங்கள்கிழமை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில் மாணவர்கள் ‘மதம் சார்ந்த’ உடைகள் அணிவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிந்திருந்த இரு மாணவிகளுக்கு எதிராக காவி சால்வை அணிந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிந்ததற்காக எம்.காம் மாணவிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்வா ஆதரவு மாணவர்கள் காவி சால்வை அணிந்து போராட்டம் நடத்தினர்.

கடந்த வாரம் புதுச்சேரியில் அரியாங்குப்பத்தில் உள்ள அரசுப் பள்ளியில் முஸ்லிம் மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து வகுப்பில் கலந்து கொள்ள விடாமல் தடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த மாதம் உடுப்பி அரசு முன் பல்கலைக்கழக கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் வகுப்புகளுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

பின்னர், ஹிஜாப் அணியாமல் வகுப்புகளுக்கு வர மறுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் சர்ச்சையாகி, மற்ற மாவட்டங்களுக்கும் பரவி, பதற்றத்துக்கும், வன்முறைக்கும் வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply