தேர்தல் தில்லுமுல்லு வழக்கில் மம்தாவை எதிர்த்து வெற்றி பெற்றவருக்கு நீதிமன்றம் நோட்டிஸ்!

Mamta-Banerjee
Share this News:

கொல்கத்தா (14 ஜூலை 2021): தேர்தல் தில்லுமுல்லு வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுவேந்து அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் கட்சியில் அதிகாரமிக்க அமைச்சராகவும், மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சுவேந்து ஆதிகாரி 2020ஆம் ஆண்டு டிசம்பரில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இணைந்தவுடன் தேர்தலில் தன்னை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வென்று காட்டுங்கள் என்று மம்தாவுக்கு சவால் விடுத்தார். சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று தனது சொந்த தொகுதியான பவானிபூரை மாற்றி நந்திரகிராமில் போட்டியிட்ட மம்தா சுமார் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார்.

வாக்கு எண்ணிக்கையின்போது மம்தா வெற்றிபெற்றதாக அறிவித்து, பின்னர் தோல்வியடைந்ததாக திடீரென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதே நேரத்தில் அவரது கட்சி மாநிலத்தில் பல இடங்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வாக்குகளை மறுபரிசீலனை செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் மம்தா முறையிட்டார். அதை தேர்தல் ஆணையம் நிராகரிக்கவே இந்தத் தேர்தல் முடிவு குறித்து நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக தெரிவித்தார். அதன்படி வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு ஜூன் 18ஆம் தேதி நீதிபதி கவுசிக் சாந்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் தொடர்பான மனு என்பதால் முதல் நாள் விசாரணையில் மம்தா பானர்ஜி நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என்று கூறி வழக்கை ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனால் ஆத்திரமடைந்த மம்தா நீதிபதி கவுசிக் சாந்தா பாஜகவுடன் தொடர்பு கொண்டவர் என்றும் அவர் தனது தேர்தல் மனுவை விசாரிக்கக் கூடாது எனவும் கூறி அவரை மாற்றுமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதினார். இந்த விண்ணப்பத்தை நிராகரித்த நீதிபதி கவுசிக் சாந்தா, மம்தாவை சரமாரியாக விமர்சித்தார். நீதிமன்றத்தின் நேர்மையை சந்தேகப்படுவது வருத்தமளிக்கிறது என்று கூறிய சாந்தா, தான் இந்த வழக்கை விட்டு வெளியேறுவதாக தெரிவித்தார்.

அதேபோல நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த மம்தாவுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். அந்தத் தொகையை கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக வழங்கப்படும் என்றும் கூறினார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஷாம்பா சர்க்காருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆன்லைன் வழியாக நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதி ஷாம்பா சர்க்கார் தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கபட வேண்டும் எனவும் இது தொடர்பாக பதிலளிக்குமாறு சுவேந்து அதிகாரி, தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்திய அலுவலருக்கு உத்தரவிட்டார்.


Share this News:

Leave a Reply