இந்திய முஸ்லீம் என்பதில் பெருமையடைகிறேன் – குலாம்நபி ஆசாத் உருக்கம்!

புதுடெல்லி (09 பிப் 2021): நான் இந்திய முஸ்லிம் என்பதை நினைத்துப் பெருமை கொள்கிறேன் என்று மாநிலங்களவையில் எதிர்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத் உருக்கமாக பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக குலாம்நபி ஆசாத், தற்போது மாநிலங்களவையில் எதிர்கட்சி தலைவராக உள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்து வருகிறார். குலாம்நபி ஆசாத்தின் பதவிக்காலம் வரும் 15ம் தேதி வாக்கில் முடியவுள்ளது.

இந்நிலையில், குலாம் நபி ஆசாத், ஓய்வு பெறுவதால் அவருக்கு பிரிவு உபசார விழா நடந்தது. அப்போது மாநிலங்களவை எம்.பி.,க்கள் பிரியாவிடை அளித்தனர். மேலும் பிரதமர் மோடி குலாம் நபி ஆசாத் சிறந்த மனிதர். அவருக்கு கர்வம் எப்போதும் இருந்ததில்லை. நாட்டின் மீது அக்கறை கொண்டவர் குலாம் நபி ஆசாத் என்றும் மாநிலங்களவையில் ஆசாத்தின் சேவை தொடர வேண்டும் என்று கண்கலங்கி பேசினார்.

இதனை தொடர்ந்து, நன்றி தெரிவித்து பேசிய குலாம் நபி ஆசாத், நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். பாகிஸ்தானுக்கு ஒரு போதும் செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். பாகிஸ்தானில் நடக்கும் சில விரும்பத்தகாத விஷயங்கள் பற்றி படிக்கும் போது, நான் இந்திய முஸ்லிம் என்பதை நினைத்துப் பெருமை கொள்கிறேன் என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply