ஆன்லைன் வகுப்புக்காக ஃபேஸ்புக்குடன் இணையும் சிபிஎஸ்இ!

Share this News:

புதுடெல்லி (16 ஜூலை 2020): இணைப்பில் நிஜமாக்கல்’ என்ற முறையில் ஆன்லைனில் பாடம் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இதற்காக ஃபேஸ்புக்குடன் இணைந்து செயலாற்ற சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

அதன்படி டிஜிட்டல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டதாக இந்த முறை இருக்கும். தற்போதைய கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த தொழில்நுட்பம் அமையும். இதற்காக ஆசிரியர்களுக்கு 3 வாரப்பயிற்சி முகாம் 5 கட்டமாக நடக்கவுள்ளது. இந்த பயிற்சி பேஸ்புக்கின் சாப்ட்வேர் மூலம் நடத்தப்படும். இதன்மூலம், மாணவர்களிடம் கற்றல் திறன் கொண்ட அனுபவத்தை உருவாக்க முடியும். இந்த பயிற்சியின் மூலம் டிஜிட்டல் பொருளாதாரம் சார்ந்த வேலை வாய்ப்புகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு மாணவர்களால் தயாராக முடியும்.

பயிற்சியின் முதல் வாரத்தில் ‘இணைப்பில் நிஜமாக்குதல்’ முறையில் அடிப்படை பாடம், கண்காணித்தல், காட்சிபடுத்தலின் கீழ் நிலை மற்றும் மொழி பெயர்த்தல் உள்ளிட்டவையும், 2ம் வாரத்தில் படக்காட்சிகள் மூலம் பயிற்சியும் நடத்தப்படுகிறது. அனிமேஷன் உள்ளிட்டவையும் இடம் பெறும்.

மூன்றாம் வாரத்தில் இணைப்பில் நிஜமாக்கல் முறை குறித்த அனுபவங்களை தெரிவிக்க வேண்டும். முதல்கட்ட பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்று சிறப்பாக முடிக்கும் ஆசிரியர்களுக்கு சிபிஎஸ்இ மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும். முதல்கட்ட பயிற்சியில் 1,600 ஆசிரியர்களும், 2ம் கட்டத்தில் 8,400 ஆசிரியர்களும் பங்கேற்கின்றனர். இவர்கள் 30 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.

விண்ணப்பிக்கும் முகவரி

இந்த ஆன்லைன் பயிற்சிக்கு விண்டோஸ் 10 மென்பொருள் கொண்ட கணினி அல்லது லேப்டாப், பேஸ்புக் டெவலப்பர் கணக்கு, செல்போன், நிலையான இன்டர்நெட் ஆகியவை அவசியம் இருக்க வேண்டும்.

நிலையான இன்டர்நெட் இணைப்பு இல்லாதவர்கள் சிபிஎஸ்இயின் தீக்சா வெப்சைட் மூலமும் பங்கேற்கலாம்.

இந்த பயிற்சி திட்டத்தில் பங்கேற்க விரும்புவர்கள் http://cbseacademic.nic.in/fb/facebookforeducation.html என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.


Share this News: