பாபர் மசூதி இடிப்பு வழக்கு – செப்டம்பர் 30 ல் தீர்ப்பு!

Advani

புதுடெல்லி (16 செப் 2020): பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்கள் இடித்துத் தள்ளினர். இந்த மசூதி இடிப்புக்கு சதி செய்ததாக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங், வினய் கட்டியார், சாக்‌ஷி மகராஜ் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவானது.

இந்த வழக்கு விசாரணை லக்னோவில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் குற்றப்பத்திரிகையில் 49 பேர் பெயர்கள் இடம்பெற்றன. ஆனால் அவர்களில் 17 பேர் இறந்து விட்டதால் 32 பேர் மீது மட்டுமே விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் முதலில் ஏப்ரல் 18-ந் தேதிக்குள் விசாரணையை முடிக்குமாறு லக்னோ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கால் அவகாசம் வழங்குமாறு தனிக்கோர்ட்டு நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து ஆகஸ்டு 31-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேரில் பெரும்பாலானவர்கள் காணொலி காட்சி வழியாகவும், மற்றவர்கள் நேரிலும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 313-ன் கீழ் வாக்குமூலம் அளித்தனர். அனைவரும் தாங்கள் அப்பாவிகள் என்றும், அரசியல் ரீதியான சதித்திட்டத்தால் இந்த வழக்கில் சிக்கி இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க மேலும் அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் கடந்த மாதம் கோரிக்கை விடுத்தார்.

அதை நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு பரிசீலித்து, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நடவடிக்கைகளை முடித்து தீர்ப்பு வழங்குவதற்கு மேலும் ஒரு மாத காலம் அவகாசம் (செப்டம்பர் 30-ம் தேதி வரை) வழங்கி உத்தரவிட்டது.

இம்மாத தொடக்கத்தில் லக்னோ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் இந்த வழக்கு கடைசியாக விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள 32 பேர் தரப்பிலான வக்கீல்களில் சிலர் நேரிலும், மற்றவர்கள் காணொலி காட்சி வழியாகவும் ஆஜராகி, தங்கள் இறுதி வாதத்தை எடுத்து வைத்தனர்.

அதைத் தொடர்ந்து விசாரணை முடிந்தது. சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி சுரேந்திர குமார் யாதவ், தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *