முஸ்லிம் பெண்களுக்கு அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கோரிக்கை!

Share this News:

புதுடெல்லி (14 பிப் 2022): ஹிஜாப் குறித்த தவறான எண்ணத்தை நீக்கும் கருத்துகளை அனைவருக்கும் பரப்புங்கள் என்று முஸ்லிம் பெண்களுக்கு அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.

கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளில் விதிக்கப்பட்ட ஹிஜாப் தடை நாடெங்கும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல மாநிலங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாபுக்கு ஆதரவாக போராட்டங்களில் குதித்துள்ளனர்.

இந்நிலையில் சமூக ஊடக அமர்வு ஒன்றில் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய பொதுச் செயலாளர் மௌலானா உம்ரைன் மஹ்ஃபூஸ் ரஹ்மானி முஸ்லிம் பெண்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “எனது அன்புச் சகோதரிகளே, ஹிஜாபைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்கவும், ஹிஜாப் குறித்த தப்பெண்ணத்தை அகற்றவும், ஹிஜாப் மூலம் நீங்கள் ஒடுக்கப்படவில்லை, ஆனால் மரியாதை, கௌரவம் மற்றும் சுதந்திரமாக இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தவும் இந்த நேரத்தைப் பயன்படுத்துங்கள். உங்கள் வெற்றி அனைத்து முஸ்லிம்களின் வெற்றியாகும்” என்று மௌலானா உம்ரைன் மஹ்ஃபூஸ் ரஹ்மானி கூறினார்.

மேலும் “முஸ்லிம் பெண்களுக்கு சுதந்திரம் உள்ளது, மேலும் சுவர்க்கம் பெண்ணின் காலடியில் இருப்பதாகக் கூறப்படும் அளவுக்கு அவர்களுக்கு மரியாதையும் வழங்கப்படுகிறது” என்றார்.

மேலும் “ஹிஜாப் என்பது ஒரு முஸ்லிம் மற்றும் மரியாதைக்குரிய பெண்ணின் அடையாளம்; இது சமூகத்தின் சாத்தானிய அம்சங்களிலிருந்து பாதுகாக்கிறது; பல நூற்றாண்டுகளாக எந்த சமூகம் நிர்வாணத்தைத் தழுவிச் சென்றதோ, அது அல்லாஹ்வின் சாபத்தாலும், கோபத்தாலும் அழிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டது” என்றும் அவர் கூறினார்.

“பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை” என்று மௌலானா உம்ரைன் மஹ்ஃபூஸ் ரஹ்மானி மேலும் தெரிவித்தார்.

“உங்கள் கவுரவத்திற்கும் கண்ணியத்திற்கும் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் வெளியே செல்லுங்கள். இதைத்தான் இஸ்லாம் விரும்புகிறது, ” என்றும் அவர் தெரிவித்தார்.

ஹிஜாப் குறித்த பிரச்சாரத்தை அதிகப்படுத்துங்கள், இதுதான் அதற்கான சரியான தருணம் என்றும் மவுலானா முஸ்லிம் பெண்களை வலியுறுத்தினார்.


Share this News:

Leave a Reply