பாஜகவுக்கு சவால் விடும் அமைச்சர் ஜெயகுமார் – சிறப்பு நேர்காணல்!

Share this News:

சென்னை (24 செப் 2020): அதிமுகவின் இடத்தை பாஜகவால் பிடிக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிபிசிக்கு அவர் அளித்த நேர்காணல்:

கே. மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் விவசாயிகளுக்கான சட்டங்களுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. இதனை அதிமுக ஆதரிக்ககாரணம் என்ன?

ப. இது தொடர்பாக முதல்வர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதிலேயே நாங்கள் ஏன் ஆதரித்தோம் என்பதற்கான காரணங்கள் இருக்கின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரம், வருமானம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில்தான் இந்தச் சட்டங்கள் இருக்கின்றன என அதில் விளக்கப்பட்டிருக்கிறது. ஆகவே எந்த வகையிலும் இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு எவ்விதமான பாதிப்பும் இருக்காது. விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் இருந்தால் எதிர்ப்போம்.

கே. இந்தியாவில் விவசாயம் என்பது மாநில அரசின் அதிகாரத்தின் கீழே வரும் ஒரு துறை. அதன் மீது மத்திய அரசு சட்டம் இயற்றியிருக்கிறது. இந்த மீறலை ஆதரிப்பது சரியா?

ப. இந்தியா என்ற கட்டமைப்பில் மத்திய அரசு சட்டம் இயற்ற அதிகாரம் படைத்தது. அந்தச் சட்டம் மாநில மக்களுக்கு உகந்ததாக இருந்தால் ஆதரவளிப்போம். ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருந்தால் கடுமையாக எதிர்ப்போம்.

கே. இந்த சட்டங்களை, மாநில உரிமைகளை மீறும் விஷயமாக நீங்கள் பார்க்கவில்லையா?

ப. அப்படி மீறினால் நாங்கள் கண்டிப்பாக எதிர்ப்போம்.

கே. இந்த சட்டத்தை மக்களவையில் அதிமுக உறுப்பினர் ஆதரித்துப் பேசியிருக்கிறார். மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் எதிர்த்துப் பேசியிருக்கிறார். உங்கள் நிலைப்பாட்டை எப்படி புரிந்துகொள்வது?

ப. எஸ்.ஆர். பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்போம் என முதல்வர் சொல்லியிருக்கிறார். அதன்படி அவரிடம் விளக்கம் கேட்கப்படும்.

கே. இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது. எதனை முன்வைத்து அந்த தேர்தலை சந்திப்பீர்கள்?

ப. நிறைய இருக்கிறது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு நிறைய செய்திருக்கிறோம். இரண்டு விஷயங்களை மக்கள் பார்ப்பார்கள். ஒன்று சட்டம் – ஒழுங்கு. இன்னொன்று அடிப்படை வசதி. இது இரண்டையும் செய்துதருவதுதான். அதை நாங்கள் செய்திருக்கிறோம். திமுக வந்தால் இதில் எல்லாம் மிகப் பெரிய தொந்தரவு இருக்கும். இதை வீடு வீடாகச் சென்று சொல்வோம். ஆகவே மக்களின் ஆதரவு எங்களுக்குத்தான் இருக்கும்.

கே. 2011 முதல் அ.தி.மு.க. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருந்திருக்கிறது. இதனால் ஏற்படக்கூடிய ஆளும்கட்சிக்கு எதிரான அலையை எப்படி சமாளிப்பீர்கள்?

ப. 1977, 1980, 1984 என எம்.ஜி.ஆர். மூன்று முறை முதல்வராகவில்லையா? அதிமுக ஆரம்பித்து 48 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 48 வருடங்களில் அதிகம் ஆட்சி செய்த கட்சி அ.தி.மு.கதான். அரசின் கொள்கை மக்களுக்கு எதிராக இருந்தால்தான் ஆளும் கட்சிக்கு விரோதமான உணர்வு ஏற்படும். அப்படி ஏதும் நாங்கள் செய்யவில்லையே… அப்படியிருக்கும்போது எப்படி anti-incumbancy ஏற்படும்? அப்படி ஒரு வாய்ப்பே இல்லை.

கே. பா.ஜ.க. தமிழ்நாட்டில் தற்போது தீவிரமாக செயல்படுகிறது. அதிமுகவின் இடத்தையே அது குறிவைப்பதாகப் பேசப்படுகிறது. உங்களுடைய கருத்து என்ன?

ப. ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் இருக்கிறது. எங்களுடைய இடம் இமயமலை. அந்த இடத்தை யாரும் நிரப்ப முடியாது. அவர்களுக்கு அபிலாஷைகள் இருக்கும். அதிக இடங்களைப் பிடிக்க வேண்டும், ஆட்சி அமைக்க வேண்டுமென நினைப்பார்கள். அது அவர்கள் கட்சியைப் பொறுத்தது. அதை மக்கள் ஏற்கிறார்களா எனப் பார்க்க வேண்டும். ஆனால், எங்கள் இடத்தைப் பிடித்து, மாற்றாக வேறொருவர் வருவது இயலாது.

கே. 2021 ஜனவரியில் சசிகலா சிறையைவிட்டு வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அ.தி.மு.கவில் மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா?

ப. சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் நிராகரித்துவிட்டு கட்சியையும் ஆட்சியையும் நடத்திக்கொண்டிருக்கிறோம். கட்சியின் பொதுக்குழுவில் என்ன முடிவெடுத்தோமோ, அந்த அடிப்படையில்தான் கட்சியும் ஆட்சியும் சென்று கொண்டிருக்கிறது. ஊடகங்கள் தங்களுக்குத் தீனி வேண்டும் என்பதற்காக பில்ட் – அப் கொடுக்கிறார்கள். அதெல்லாம் எடுபடாது. அவர் வெளியில் வருவதால் எந்த தாக்கமும் இருக்காது. அ.ம.மு.க. தனியாக நின்று பார்த்தார்கள். அதற்கு சசிகலாவின் ஆதரவு இருந்தது. டிடிவி தினகரன் எல்லா இடங்களிலும் போட்டியிட்டார். முடிவு என்ன ஆனது? தமிழகத்தில் அவர்களின் சக்தி என்ன என்பது தெரிந்துவிட்டது. அதனால் எந்தத் தாக்கமும் இருக்காது.

கே. கடந்த வாரம், அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முதல்வர் வேட்பாளராக யார் இருப்பது என்பது குறித்து அந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. எதிர்க்கட்சிகள், உறுதியாக ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தும் பட்சத்தில், இந்தப் பிரச்சனை உங்களைப் பலவீனப்படுத்தாதா?

ப. இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக உரிய நேரத்தில் கட்சி முடிவுசெய்யும் என்று சொல்லிவிட்டோம். ஆகவே இது தொடர்பாக கட்சி உரிய நேரத்தில் முடிவுசெய்யும். இது குறித்து யாரும் விவாதிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்ட பிறகு நான் அதைப் பற்றி பேச முடியாது.

கே. இந்தப் பிரச்சனை உங்கள் கட்சிக்கு பலவீனமாக இருக்காதா?

ப. பலவீனமாக இருக்காது. எத்தனையோ பிரச்சனைகள் வந்திருக்கின்றன. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிரச்சனைகள் வந்திருக்கின்றன. இரட்டை இலைகூட முடக்கப்பட்டது. அதிலிருந்து மீண்டிருக்கிறோம். ஆகவே, இதுவும் கடந்து போகும்.

நன்றி: பிபிசி


Share this News:

Leave a Reply