புழுத்த அரிசியும் பறிபோன ஆட்சியும் – ஒரு நினைவலை!

ரேசன் அரசி சாப்பாடு
Share this News:

ப்போது அரசு இரண்டாம் முறை தந்த வாய்ப்பில், எங்கள் வீட்டு ரேஷன் கார்டை அரிசி கார்டாக மாற்றிய பின், அரசு வழங்கிய பொங்கல் பரிசாக ₹2500/-, பிரம்பு போன்று மெலிந்த ஒரு கரும்பு, 1 kg அளவுக்குப் பச்சரிசி, 1 kg சீனி, ஆறேழு அண்டிப் பருப்பு, கிஸ்மிஸ், ஏலக்காய் ஆகியவை கிடைத்தன. — ஒரு வாரம் கழித்து, பொங்கல் வேட்டி கிடைத்தது. ரேஷன் கடைக்காரன் சேலையைப் பதுக்கிவிட்டான் போல. இரண்டில் ஒன்று தான் எனச்சொல்லி விட்டான்.

கூடவே 20 கிலோ நல்ல தரமான புழுங்கல் அரிசியும் 2 கிலோ தரமான கோதுமையும் கிடைத்தன அரசு செலவில்.

****

காங்கிரஸ் கட்சி ஆண்ட தமிழ்நாட்டில் (Madras State) ரேஷன் கடை கியூவில் நின்று, தள்ளு முள்ளில் சட்டையும் வேட்டியும் கிழிய, வியர்வையில் ஊறி, வீரத்தழும்புகள் பெற்று, துர்நாற்றம் வீசிய – புழுத்த – கல்லைப்போல் கட்டி பிடித்த – டெக்னிக் கலர் அரிசி வாங்கியதை மறக்கவில்லை.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி இழக்கவும் அக்கட்சி அழியவும் அரிசிதான் காரணம்.

“அரிசி கிடைக்கவில்லை என்றால் எலிக்கறி தின்னுங்கள்” என்று முதலமைச்சர் பக்தவத்சலம் கூறியதும்

“அய்யயோ பொன்னம்மா; அரிசி விலை என்னம்மா”

“காமராஜ் அண்ணாச்சி கருப்பட்டி விலை விலை என்னாச்சி”

“பகத்வத்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி”

போன்ற தேர்தல் கால முழக்கங்களும்

“ரூபாய்க்கு மூன்று படி அரிசி” என்று தி மு க கொடுத்த வாக்குறுதியும்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி இழக்க காரணங்களாயின.

தி மு க கொடுத்த, ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனினும் இதுவரை, ஐம்பதாண்டுகள் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் அரிசிப் பஞ்சம் வந்ததில்லை.

நிற்க, 1967 ஆம் ஆண்டுக்குப் பின் நேற்றுத்தான் ரேஷன் அரிசியில் சமைத்த சோறு சாப்பிட்டேன்.

சோற்றில் துர்நாற்றம் இல்லை. சுவையிலும் வேறுபாடு இல்லை. சாம்பார் அல்லது மீன்குழம்பு நல்ல சேர்க்கை.

எங்கள் வீட்டிற்குச் சிறிய பரப்பளவில், வீட்டுத் தேவைக்கு விளைவிக்கும் வயல்கள் இருந்தாலும் அக்காலக் கட்டத்தில்(1965 – 66) ஏற்பட்ட வறட்சியின் காரணத்தால் விளைச்சல் முழுமையாக இல்லாததாலும் வெளி மார்க்கெட்டில் காங்கிரஸ் ஆதரவு பெற்ற பெரு முதலாளிகள் உணவுப்பொருட்களைப் பதுக்கி வைத்ததாலும் கடத்தலாலும் ஏற்பட்ட பஞ்சத்தால் அரசு நடத்திய ரேஷன் கடைகளில் விற்கப்பட்ட, புழுத்து நாறிய கட்டி பிடித்த அரிசியை விலை கொடுத்து வாங்கி உண்ட நினைவு மறையவில்லை.

2011 ஆம் ஆண்டு, அ இ அ தி மு க தேர்தல் அறிக்கையில் வாக்களித்தபடி ஜெயலலிதா தமிழ்நாட்டு ரேஷன் கடைகளில் இலவச அரிசித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

காலப்போக்கில் அதில் அ இ அ தி மு க ஆட்களின் தலையீடும் அரிசிக் கடத்தலும் பதுக்கலும் உருவாயின. தரமற்ற, நாறிய, கலப்பட அரிசி ரேஷன் கடைகளில் கொடுக்கப்பட்டது. பொதுமக்கள் அந்த அரிசியைக் கோழிப்பண்ணைகளுக்கும் கால்நடைத் தீவனம் தயாரிப்பவர்களுக்கும் விற்றுக் காசாக்கினர்.

கொரோனா காலத்தில் வேலையும் வருமானமும் போய், மக்களுள் பெரும்பாலோர் இலவச ரேஷன் அரிசியை மட்டுமே நம்பி, உண்டு வாழ்கின்றனர்.

இப்போதைய ஆட்சியில் அரிசியும் அவ்வப்போது ஓரளவு தரமாக வழங்கப்பட்டது.

ஆனால் தரமான அரிசி எப்போதும் வழங்கப்படும் என்ற நம்பிக்கை இல்லை.

இது பொங்கல் சீஸன் என்பதாலும் தேர்தல் அடுத்து இருப்பதாலும் நல்ல அரிசி வழங்கப்பட்டிருக்கலாம். அட்லீஸ்ட் தேர்தல் முடிவது வரையாவது நல்ல அரிசி இலவசமாகவே மக்களுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

தேர்தல் முடிவுக்குப் பின்னர்?

அது, தமிழகத்தினுள் திராவிடத்துக்கு எதிராக, கழகங்களை அழிக்க அ இ அ தி மு க கணவாய் வழியாக நுழைய இருக்கும் ஆரியப் படையெடுப்பின் வெற்றி, தோல்வியைப் பொறுத்தது.!

**
திராவிடத்தால் வாழ்கிறோம்… இயன்றால் தொடரும்.

-நாஞ்சிலன்


Share this News:

Leave a Reply