பணம் வந்த கதை – பகுதி 13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து!

பணம் வந்த கதை – தொடர்!
Share this News:

டேல்லி குச்சிக்கும் இங்கிலாந்து – ஃபிரான்ஸ் போருக்கும் என்ன தொடர்பு? தொடர்பு இருக்கிறது.

17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஃபிரான்ஸிற்கும் ஆங்கிலோ-டச்சு, ரோம், ஸ்பெயின் உள்ளிட்ட இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் கடும் யுத்தம் நடைபெற்றது.

கி.பி 1688 முதல் 1697 வரை நடந்த இந்த யுத்தத்தை ‘ஒன்பது ஆண்டு யுத்தம்’ (Nine Years’ War) என்றே வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த யுத்தத்தின் ஒரு அங்கமாக 1690, ஜூலை 10 அன்று ‘பீச்சி ஹெட்’ என்ற இடத்திற்கு அருகில் ஃபிரான்ஸின் கடற்படையை ஆங்கிலேய, டச்சு படைகள் நேருக்கு நேர் சந்தித்தன. (Battle of Beachy Head). ஃபிரான்ஸின் வலிமை வாய்ந்த கடற்படையை எதிர்தரப்பினரால் அசைக்கக்கூட முடியவில்லை. ஆங்கிலேய, டச்சுப் படைகள் மாபெரும் தோல்வியைத் தழுவின.

கன்னத்தில் கை வைத்துக் கொண்டார் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் வில்லியம். அவர்கள் தரப்பில் கவிழ்ந்தது ஒன்றல்ல, இரண்டல்ல, பதினோரு கப்பல்கள். ஒட்டுமொத்த இங்கிலாந்தின் பொருளாதாரத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த நட்டம்.

‘ஃபிரான்ஸைப் போலவே வலிமை மிகுந்த கடற்படையை உருவாக்கி தானும் ஒரு வல்லரசாக ஆக வேண்டும்’ என்ற உத்வேகம் இங்கிலாந்திற்கு ஏற்பட இத்தோல்வியும் ஒரு காரணமாக இருந்தது. கடற்படையை வலுப்படுத்த வேண்டும். சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தையும் சீர் படுத்த வேண்டும். ஆனால் கருவூலத்தில் பணமே இல்லை. குழப்பத்தில் இருந்தார் மன்னர்.

இச்சந்தர்ப்பத்தை மிகச் சரியாக பயன்படுத்த எண்ணினார் வில்லியம் பேட்டர்ஸன் என்பவர். 1691-ல் ஒரு திட்டத்தை தயாரித்துக் கொண்டு மன்னரை அணுகினார் அவர். அப்போது முறையான ஒப்புதல் கிடைக்காததால் கிடப்பில் போடப்பட்டது அத்திட்டம்.

அத்திட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டிருந்த சார்லஸ் மோன்டாகு என்பவர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதை தூசு தட்டி மெருகேற்றிக் கொண்டு மீண்டும் மன்னரைச் சந்தித்தார்.

திட்டம் இதுதான்: மன்னரின் ஒப்புதலுடன் ஒரு வங்கி தொடங்கப்பட வேண்டும். அந்த வங்கி உடனடியாக அரசாங்கத்திற்கு தேவையான 1.2 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளை கடனாக வழங்கும். அந்தக் கடனுக்கான வட்டி ஆண்டிற்கு 8%. தவிர, சேவைக் கட்டணமாக ஆண்டிற்கு ஒருமுறை 4,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் வங்கிக்கு வழங்கப்பட வேண்டும். இந்த வங்கியே அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வங்கியாக செயல்படும். மிக முக்கியமான நிபந்தனை ஒன்றும் உண்டு. அது, பண நோட்டுகளை அச்சடிக்கும் உரிமை இந்த வங்கிக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

அப்போதைய இங்கிலாந்தில் வட்டி வாங்குவது சட்டப்படி குற்றம். ‘மக்னா கார்ட்டா’ எனப்படும் ஆதி அரசியலமைப்புச் சட்டப்படி மரண தண்டனைக்குரிய குற்றம் அது.

அச்சட்டத்தையே திருத்தும் கோரிக்கையை முன்வைத்தார்கள் வந்தவர்கள். தவிர, பணம் வெளியிடுவதென்பது மன்னருக்கு மட்டுமேயான பிரத்யேக உரிமை. மன்னர்கள் டேல்லி குச்சிகளை நாணய அளவீடுகளாக பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் என்பதை முன்னரே பார்த்தோம். அந்த உரிமையையும் விட்டுத்தரும்படி கேட்டார்கள் அவர்கள்.

இருந்தாலும் இந்த முறை மன்னர் அவர்களின் நிபந்தனைகள் அனைத்தையும் ஒப்புக் கொண்டார். அன்றைக்கு அரசாங்க கஜானா இருந்த நிலைமைக்கு இதை விட்டால் வேறு வழியில்லை போலும். ‘பீச்சி ஹெட்’ போர் நடந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1694, ஜூலை 27 என்ற சுபயோக தினத்தில் ‘பேங்க் ஆஃப் இங்கிலாந்து’ தொடங்கப் பட்டது.

தொடங்கப்பட்ட பன்னிரண்டே நாட்களில் அரசாங்கத்திற்குத் தேவையான 1.2 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டு தொகை திரட்டப்பட்டு மன்னரிடம் வழங்கப் பட்டது. மன்னரின் விருப்பப்படியே அத்தொகையில் பாதி கடற்படையை மறுசீரமைக்கச் செலவிடப் பட்டது.

இங்கிலாந்தின் வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது இந்த நிகழ்வு. திடீரென மும்மடங்காக அதிகரிக்கப்பட்ட கடற்படையின் தேவைகளுக்கு ஈடு கொடுக்க புதுத் தொழிற்சாலைகள் முளைத்தன. உப தொழில்கள் தோன்றின. விவசாய உற்பத்தி அதிகரிக்கப் பட்டது. சரிந்திருந்த நாட்டுப் பொருளாதாரம் மெல்ல மெல்ல நிமிர்ந்தது.

அரசியல் ரீதியிலும் நிறைய மாறுதல்கள் தோன்றின. 1707-ல் இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் ஒருங்கிணைந்து ‘யுனைட்டட் கிங்டம்’ உருவானது. வலிமை வாய்ந்த கடற்படையைக் கொண்டு பிரிட்டன் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு மாபெரும் வல்லரசாக உருவானது.

‘சரி.. அதெல்லாம் இருக்கட்டும்.. பணத்தைப் பத்தி பேசிக்கிட்டிருக்கப்போ எதுக்கு படையைப் பத்தி பேசணும்?’னு கேக்குறீங்களா?

பீச்சி ஹெட் போரில் ஏற்பட்ட தோல்வியும் அதனால் விளைந்த நட்டமுமே பேங்க ஆஃப் இங்கிலாந்து உருவாக காரணமாக அமைந்தது. அதோடு, பண நோட்டுகளை அச்சடிக்கும் உரிமை இந்த வங்கிக்கு பட்டயம் போட்டுக் கொடுக்கப் பட்டதால், அதுவரை புழக்கத்தில் இருந்த டேல்லி குச்சிகள் போன்ற நாணய அளவீடுகள் ஒழிக்கப் பட்டன. மீந்து போன டேல்லி குச்சிகளை கணப்பு அடுப்பில் எரிக்க பயன்படுத்தினார்களா என்பது தெரியவில்லை.

-தொடரும்

 சலாஹுத்தீன் பஷீர்

பணம் வந்த கதை – பகுதி 12: டேல்லி குச்சிகள்!


Share this News: