பணம் வந்த கதை – பகுதி 12: டேல்லி குச்சிகள்!

பணம் வந்த கதை – தொடர்!
Share this News:

ந்தக் கதையில் பண்ட மாற்றிலிருந்து பண நோட்டிற்கு வெகு சீக்கிரம் வந்து விட்டோம்.

ஆனால் உண்மையில், இந்த மாற்றத்திற்கு வெகுகாலம் பிடித்தது. பல நூற்றாண்டுகள்!

தங்கம், வெள்ளி போன்ற மதிப்பு மிக்க உலோகங்களால் செய்யப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் வருவதற்கு முன்பு ஒவ்வொரு பிரதேசத்திலும் வசித்த மக்கள் வெவ்வேறு விதமான பொருட்களை ‘நாணயங்களாக’ பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பண்டைய சீனா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற பிரதேசங்களில் ஒருவகை சிப்பிகள் நாணயங்களாக பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. ஜப்பானில் ‘கோகு’ எனப்படும் அரிசி, யூதர்களிடையே கோதுமையின் ஒரு அளவான ‘ஷெகல்’… இப்படி பலவித நாணய அளவீடுகள்.

அதுபோல இங்கிலாந்து மன்னர்களின் பிரத்தியேக நாணய அளவீடு ‘டேல்லி குச்சிகள்’. ‘டெல்லி’ அல்ல.. ‘டேல்லி’.. Tally! கணக்காளர்களுக்கு மிகவும் பரிச்சயமான வார்த்தை இது. நிறுவன கணக்குகளில் பற்று, வரவு என இரு பக்கங்களை ‘டேல்லி’ செய்வது அவர்களின் முக்கியமான பணிகளுள் ஒன்று!

மன்னர் அரசாங்க காரியங்களுக்காக செலவு செய்ய வேண்டியிருந்தால் பொன் முடிப்பு, வெள்ளி முடிப்பெல்லாம் கிடையாது. ஒரு சாண் அளவிலான மரக்குச்சி ஒன்றை எடுத்து கத்தியால் அதில் சில வெட்டுகளை உண்டாக்குவார். ஆயிரம் பவுன் என்றால் ஆழமான வெட்டு. நூறு என்றால் அதை விட சிறிய வெட்டு. ஒன்று, இரண்டு என்றால் சிறு கீறல்களே போதும்.

பிறகு அக்குச்சி இரண்டாக பிளக்கப்படும். இரண்டு பகுதியிலும் அந்த வெட்டுக்கள் தெளிவாகத் தெரியும். இரண்டில் ஒரு பகுதியை மன்னர் தானே வைத்துக் கொண்டு இன்னொரு பகுதியை பணம் பெற்றுக் கொள்ள வந்தவரிடம் கொடுத்து விடுவார்.

இந்தக் குச்சியினால் அதைப் பெறுபவருக்கு என்ன பயன்? நாம் நமது ‘பர்ஸ்’களில் சில ‘தாள்’களை மடித்து பத்திரமாக வைத்திருக்கிறோமே, அதாங்க.. கரன்சி நோட்டு…! அது நமக்கு எப்படி பயன்படுகிறதோ அதே போலவே இந்தக் குச்சிகளும் பயன்பட்டுக் கொண்டிருந்தன.

ஒரு உதாரணம் பார்ப்போம்.

திருமதி எலிசபெத் டைலர் இங்கிலாந்து அரசவை தையல்காரர் என்று வைத்துக் கொள்வோம். அவர் ஓர் ஆண்டிற்கு அரச குடும்பத்தினருக்குத் தேவையான உடுப்புகளை தயாரித்துக் கொண்டு போய் அரண்மனையில் கொடுப்பார். அதன் விலை தோராயமாக பத்தாயிரம் பவுன். மகாராணியம்மா உடுப்புகளை பரிசோதித்து ஒப்புதல் வழங்கியதும் அரசாங்கக் கணக்காளர் எட்டு, பத்து டேல்லி குச்சிகளை எடுத்து அதில் சில வெட்டுகள், சில கீறல்களை ஏற்படுத்தி பின் அதை இரண்டாகப் பிளந்து ஒரு பகுதியை எலிசபெத் டைலரிடம் கொடுப்பார். எலிசபெத்திற்கு சேர வேண்டிய பத்தாயிரம் பவுன் அரண்மனையில் இருக்கிறது என்பதற்கான உத்தரவாதம் அது!

இங்கிலாந்து அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் பிரஜைகள் வரித்தொகையை இந்த டேல்லி குச்சிகளைக் கொண்டு மட்டுமே கட்ட முடியும். ரிச்சர்ட் ஒரு துணி வியாபாரி. அவர் அரசாங்கத்திற்கு நிறைய வரி கட்ட வேண்டியிருந்தது. அவர் எலிசபெத் கேட்கும் துணிகளை அவருக்கு சப்ளை செய்துவிட்டு அதற்குப் பகரமாக டேல்லி குச்சிகளை அவரிடமிருந்து பெற்றுக் கொள்வார்.

ஆண்டு முடிவில் ரிச்சர்ட் வரி செலுத்தும் நேரம் வரும்போது அவர் சேகரித்து வைத்திருந்த குச்சிகளை எடுத்துச் சென்று அரசாங்க கணக்காளரிடம் ஒப்படைப்பார். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து தன்னிடமிருக்கும் அதன் இன்னொரு பகுதியுடன் ஒப்பிட்டு, ‘ஒரிஜினல்தானா?’ என்பதை சரி பார்த்த பிறகு கணக்காளர் அவற்றை ஏற்றுக் கொள்வார்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இக் குச்சிகள் அப்போதைய கரன்சி நோட்டுகள். கரன்சி நோட்டுகளை விடவும் பாதுகாப்பானவை. கள்ள நோட்டு மாதிரி ‘கள்ளக் குச்சிகள்’ செய்வதெல்லால் கிட்டத்தட்ட முடியாத காரியம். அரசாங்க நிதியத்தில் இருக்கும் அதன் இன்னொரு பகுதியுடன் ஒப்பிடும்போது, அதைச் செய்ய பயன்பட்ட மரம், அதன் வெட்டுகள், கீறல்கள், அச்சுகள், எழுத்துகள், பிளவு பட்ட பக்கம் என எல்லா அம்சங்களும் பொருந்திப் போக வேண்டும்.

இந்தக் குச்சிகள் இங்கிலாந்தில் சுமார் 750 ஆண்டுகள் புழக்கத்தில் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இப்படியாக இங்கிலாந்து மன்னர்களும் பிரஜைகளும் டேல்லி குச்சிகளைக் கொண்டு சுபிட்சமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த காலத்தில், இங்கிலாந்திற்கும் ஃபிரான்ஸிற்கும் இடையில் கடும் போர் மூண்டது.

-தொடரும்

சலாஹுத்தீன் பஷீர்

பணம் வந்த கதை – பகுதி 11: கள்ளச் சீட்டும் ‘நல்ல’ சீட்டும்!


Share this News: