பணம் வந்த கதை – பகுதி 14 : பணம் காய்க்கும் மரம்

பணம் வந்த கதை – தொடர்!
Share this News:

பேங்க் ஆஃப் இங்கிலாந்து உலகில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட மத்திய வங்கி. இங்கிலாந்திற்கு முன்பாக 1668-லேயே சுவீடனின் மத்திய வங்கி தொடங்கப் பட்டிருந்தது. எனினும் பேங்க் ஆஃப் இங்கிலாந்தைப் பின்பற்றியே பெரும்பாலான நாடுகளில் மத்திய வங்கிகள் தொடங்கப்பட்டு இன்றளவும் நடந்துக் கொண்டுள்ளன.

ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மத்திய வங்கி (Central Bank) இருக்கும். அதன் பணிகளுள் முக்கியமானது அந்த நாட்டிற்கான கரன்சி நோட்டுகளை அச்சடித்து வெளியிடுவதாகும். இது நமக்கெல்லாம் தெரிந்ததுதான். இந்தப் பணியை இன்றளவும் மற்ற எல்லா மத்திய வங்கிகளையும் போல பேங்க் ஆஃப் இங்கிலாந்தும் செய்து வருகிறது.

ஒரு அரசாங்க அமைப்பு அந்த நாட்டிற்கான கரன்சி நோட்டுக்களை அச்சடித்து வெளியிடுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என நமக்குத் தோன்றலாம். இங்குதான் ஒரு முக்கியமான அம்சத்தை கவனிக்க வேண்டும். இங்கிலாந்திற்கான கரன்சி நோட்டுகளை அச்சடித்து வெளியிடும் உரிமையைப் பெற்ற பேங்க் ஆஃப் இங்கிலாந்து, அரசு சாராத ஒரு தனியார் நிறுவனம். 1694-ல் அந்த வங்கி தொடங்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் அது தனியார் நிறுவனமாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது. 1946-ல்தான் இந்த வங்கி அரசுடைமை ஆக்கப் பட்டது.

இங்கிலாந்து மன்னருக்குத் தேவையான 1.2 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டு தொகையை கடனாகக் கொடுப்பதற்குப் பகரமாக இரு முக்கிய நிபந்தனைகளை முன்வைத்தே பேங்க் ஆஃப் இங்கிலாந்து தொடங்கப் பட்டதை சென்ற தொடரில் பார்த்தோம். அவை இரண்டுமே பணத்தின் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கற்கள் என்பதால் அவற்றைச் சற்று விரிவாகவே பார்த்து விடுவோம்.

முதலாவது, கடன் தொகைக்கு ஆண்டுதோறும் 8% வட்டி கொடுக்கப்பட வேண்டும் என்பதாகும்.

வட்டித் தொழில் என்பது ஆதி காலத்திலிருந்தே யூத சமுதாயத்தினரின் குலத் தொழிலாகவே இருந்தது. யூதர்களின் இறைவேதம், வட்டியை அவர்களுக்குத் தடை செய்திருந்த போதிலும் அதையும் மீறி அவர்கள் வட்டித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

பின்னர் இயேசு கிருஸ்துவின் காலத்தில் கிருஸ்துவ சமுதாயத்தினரின் இறைவேதமான பைபிளிலும் வட்டி தடை செய்யப் பட்டது. ஆனால் யூதர்களோ தங்கள் தொழிலை விடாது நடத்திக் கொண்டிருந்தனர். அதுவும் தேவாலயங்களுக்கு உள்ளேயே கடைவிரித்து கனஜோராக அவர்கள் தொழில் நடத்தினர். மிகவும் சாந்தமானவர் என அறியப்பட்டிருந்த இயேசு கிருஸ்து மிகக் கடுமையாக நடந்துக் கொண்ட ஒரே நிகழ்வு, வட்டிக்காரர்களை அவரது ஆலயங்களிலிருந்து விரட்டியடித்ததுதான்.

‘மக்னா கார்ட்டா’ எனப்படும் ஆதி அரசியலமைப்புச் சட்டப்படி வட்டித் தொழிலில் ஈடுபடுவது மரண தண்டனைக்குரிய குற்றம். இதனை அடிப்படையாக வைத்து ஏற்படுத்தப்பட்ட அப்போதைய இங்கிலாந்து அரச சட்டங்களும் வட்டியை தண்டனைக்குரிய ஒரு குற்றமாகவே வரையறுத்திருந்தன. அந்தச் சட்டங்களையெல்லாம் மன்னரின் ஆசியுடன் ஓரம் கட்டிவிட்டுத்தான் பேங்க் ஆஃப் இங்கிலாந்து தொடங்கப் பட்டது.

இரண்டாவது நிபந்தனை கரன்சி நோட்டுகளை அச்சடித்து வெளியிடும் உரிமை அரசாங்கத்திடமிருந்து ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகும். டேல்லி குச்சிகளை அதிகாரபூர்வ ‘நாணயங்களாக’ பயன்படுத்தி வந்த இங்கிலாந்து அரசு, அந்த உரிமையை ஒரு தனியார் நிறுவனமான பேங்க் ஆஃப் இங்கிலாந்திற்குத் தாரை வார்த்தது.

அது மட்டுமல்ல. அய்யாவுவின் கதையில் அவர் மக்களிடமிருந்து தங்க நாணயங்களை பெற்றுக் கொண்டு அதற்குப் பகரமாக துண்டுச் சீட்டுகளை வெளியிட்டதையும் அந்தத் துண்டுச் சீட்டுகளே பிறகு கரன்சி நோட்டுகளாயின என்று பார்த்தோமே, நினைவிருக்கிறதா?

ஒருவர் 100 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை அய்யாவு வசம் கொடுத்தால் பதிலுக்கு அவர் அதே அளவு மதிப்புள்ள நாணயச் சீட்டுகளையே வெளியிட முடியும். ஏறக்குறைய இதே விதிமுறையை அச்சமயம் நாணய மாற்றுத் தொழிலில் ஈடுபட்டிருந்த பொற்கொல்லர்களும் சிறு வங்கிகளும் நடைமுறைப் படுத்திக் கொண்டிருந்தனர். 100 கிலோ தங்கம் கையிருப்பில் வைத்திருக்கும் வங்கி, 100 கிலோ மதிப்பிற்கு மட்டுமே நாணயங்கள் வெளியிட முடியும். 100 கோடி ரூபாய் வைப்பு நிதியாக பெற்றிருக்கும் வங்கி, 100 கோடி ரூபாய் மட்டுமே கடனாக வழங்க முடியும். இந்த விதியும் பேங்க் ஆஃப் இங்கிலாந்திற்காக தளர்த்தப் பட்டது.

இந்த விதிமுறை மாற்றத்தினால் என்ன பயன்? 100 கிலோ தங்கம் இருப்பில் வைத்திருக்கும் ஒரு மத்திய வங்கி அதைப்போல பல மடங்கு மதிப்பில் கரன்சி நோட்டுகளை வெளியிட முடியும். 5 மடங்கு 10 மடங்கு 20 மடங்கு என ஓவ்வொரு நாட்டிலும் அதனதன் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப கரன்சி நோட்டுகளை வெளியிட்டுக் கொள்ளலாம்.

மத்திய வங்கிகள் இவ்வாறு அச்சடித்துக் கொள்ள முடியும் என்றால் இதர வங்கிகள் வேறு வகையில் பணம் பண்ணின.

ஒரு வங்கியில் 100 கோடி ரூபாய் வைப்பு நிதி இருக்கிறது என்றால் அதன் பல மடங்கிற்கு, 500 அல்லது 1000 கோடிக்கு அவர்கள் கடன் கொடுக்க முடியும்.

‘என் கிட்ட பணம் காய்க்கும் மரமா இருக்கிறது?’ என்று சமயத்தில் யாரிடமாவது எரிந்து விழுவோம். உண்மையில் வங்கிகள் பணம் காய்க்கும் மரங்களாக இருக்கின்றன.

தொடரும்…

 சலாஹுத்தீன் பஷீர்

பணம் வந்த கதை – பகுதி 13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து!


Share this News:

Leave a Reply