என்ன நடக்குமோ ஏது நடக்குமோ – பரபரப்பில் காபூல்!

Share this News:

காபூல் (16 ஆக 2021): ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க படையின் பெரும் பகுதி வெளியேறிவிட்ட நிலையில் 6 ஆயிரம் வீரர்கள் மட்டும் ஆப்கானிஸ்தானில் உள்ளனர்.

அவர்கள் தற்போது விமான நிலையத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய கட்டுப்பாட்டில் விமான நிலையம் மட்டும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். நேற்று தலைநகரம் காபூலுக்குள் நுழைந்த தலிபான்கள் முக்கிய கட்டிடங்கள் அனைத்தையும் சில மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதிபர் மாளிகையும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதிபர் அஷ்ரப் கனி மாளிகையில் இல்லை. அவர் தஜிகிஸ்தான் நாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். இதனால் நாட்டின் முழு கட்டுப்பாடும் இப்போது தலிபான்கள் கையில் வந்துள்ளது.

பஸ்-ரெயில்களில் இடம் பிடிக்க ஏறுவதுபோல ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு உள்ளே செல்கிறார்கள்.

காபூலில் மட்டும் 60 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் பலர் எப்படியாவது வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல வேண்டும் என்று கருதுகின்றனர். வேறு எந்த பாதையும் இல்லாததால் விமான நிலையத்துக்கு வருகிறார்கள்.

அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க ராணுவ வீரர்கள் முயற்சித்து வருகிறார்கள். ஆனாலும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் இன்று காலை அமெரிக்க ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனால் கூட்டத்தினர் கலைந்து ஓடினர். பின்னர் பொதுமக்களை கியூவில் நிறுத்தி விமானத்தில் ஏறுவதற்கு அனுமதித்தனர்.

அதே நேரத்தில் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சிக்கும் யாரையும் இதுவரை தலிபான்கள் தடுத்து நிறுத்தவில்லை.

ஒரு வேளை தங்களுக்கு வேண்டாத நபர்கள் வெளியேறுவதை தடுக்கும் வகையில் தலிபான்கள் நடவடிக்கைகள் எடுக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் விமான நிலையத்தில் மிகுந்த பீதியுடன் மக்கள் காணப்படுகிறார்கள்.

தலைநகரம் காபூலுக்குள் எங்கு பார்த்தாலும் தலிபான்கள் வாகனங்களில் சுற்றி வருகிறார்கள். ஆனால் இதுவரை பொதுமக்கள் யாரையும் அவர்கள் தாக்கவில்லை. ஆனாலும் தலிபான்கள் திடீர் நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். அதே நேரத்தில் தலிபான்கள் ஆட்சியை விரும்பும் பலர் தெருக்களில் ஆடி, பாடி கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

ராணுவத்தில் பணியாற்றிய பலர் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று கருதுகின்றனர். தற்போது ராணுவத்தினர் தங்கள் வீடுகளுக்கு செல்லலாம் என்று தலிபான்கள் அறிவித்து இருக்கிறார்கள். எனவே ராணுவத்தினர் பணியை நிறுத்திவிட்டு வீடுகளுக்கு திரும்பிவிட்டனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதியான ஆட்சியை உருவாக்க சர்வதேச நாடுகளும் முயற்சித்து வருகின்றன. ஐ.நா. சபையும் இதற்கான முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே புதிய ஆட்சியை நிறுவ தலிபான்கள் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். விரைவில் அதிபர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் தலிபான்களின் முன்னணி தலைவர்கள் அமர்த்தப்படுவார்கள் என்று தெரிகிறது.

காபூல் நகரம் முழுவதும் தலிபான்கள் வசம் இருக்க இந்த ஒரு பகுதி மட்டுமே அமெரிக்க படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றிய ஊழியர்களும் வெளியேறுவதற்காக விமான நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானில் உயர் அதிகாரிகளாக இருந்தவர்கள், ராணுவ அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் பலரும் தலிபான்களுக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்காக விமான நிலையத்துக்கு வந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் தலிபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ? என்ற பீதியில் ஏராளமான மக்களும் நாட்டை விட்டு வெளியேறும் வகையில் விமான நிலையத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

ஆனால் குறைந்த அளவு விமானங்களே வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்து புறப்படும் ஒன்றிரண்டு விமானங்களிலும் ஏறுவதற்கு முண்டியடித்து வருகிறார்கள்.


Share this News:

Leave a Reply