சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 25 பேர் பலி – 40 பேர் தப்பியோட்டம்!

ஹைதி (27 பிப் 2021): ஹைதி நாட்டில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் அதிகமானோர் தப்பியோடியுள்ளனர்.

ஹைதி நாட்டின் தலைநகரான போர்ட்-அவ்-ப்ரிண்சின் வடகிழக்கு பகுதியில் க்ரோஸ்-டிஸ்-பவ்க்யூட்ஸ் சிவில் சிறைச்சாலை உள்ளது. அந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த சிறைச்சாலையில் கடந்த வியாழக்கிழமை திடீரென கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் கைதிகளுக்கும் சிறைக்காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளபட்டபோதும் சிறைக்காவலர்களால் கைதிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த கலவரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலை,கொள்ளை கும்பல் தலைவனான அர்நெல் ஜோசப் என்ற குற்றவாளி தப்பிச்செல்ல நடத்தப்பட்டுள்ளது. கலவரத்தை பயன்படுத்தி அர்நெல் ஜோசப் தப்பிச்சென்றான்.

அந்த குற்றவாளி எல்எஸ்ட்ரி நகரில் உள்ள அர்டிபொநைட் என்ற பகுதியில் உள்ள சோதனைச்சாவடியை கடக்க முயன்றான். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குற்றவாளி அர்நெல் ஜோசப்பை சுட்டுக்கொன்றனர்.

சிறைச்சாலை கலவரத்தில் 400-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர். மேலும், இந்த கலவரத்தில் சிறைத்துறை அதிகாரிகள் உள்பட மொத்தம் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹைதி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சிறையில் இருந்து தப்பிச்சென்ற கைதிகளை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply