கொரோனா எதிரொலியால் குறைந்த வாட்ஸ் அப் சேவை – திணறும் வாடிக்கையாளர்கள்!

Share this News:

புதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக வாட்ஸ் அப் தனது சேவையை குறைத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் மக்களின் பொழுதுபோக்காக தொலைக்காட்சியும் மொபைலுமே உள்ளன. அதிலும் மொபைல் போனிலே மக்கள் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். மேலும், ஐ.டி நிறுவனங்கள் பல தங்களது பணியாளர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் மொபைல் டேட்டா பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு பயன்படுத்தும் மொபைல் டேட்டா அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மொபைல் டேட்டாவை சிக்கனமாகப் பயன்படுத்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் சமீபத்தில் அறிவுறுத்தி இருந்தன.

இதைத்தொடர்ந்து, வாட்ஸ்ஆப் நிறுவனம் சர்வர் உள்கட்டமைப்பு வசதிக்காக ஸ்டேட்டஸ் விடியோவில் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, இதற்கு முன்னதாக 30 வினாடிகள் ஸ்டேட்டஸ் வைக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 15 வினாடிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 15 வினாடிகளுக்கு மேல் இருக்கும் விடியோக்களை ஸ்டேட்டஸ் வைக்க முடியாது. வாட்ஸ்அப் சர்வர் தங்குதடையின்றி இயங்கவும், சர்வர் உள்கட்டமைப்புகளில் டிராஃபிக்கை குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால், இது வாடிக்கையாளர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply